சிக்லெட்ஸ் ; விமர்சனம்


நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் சிறு வயது முதலே தோழிகளாக இருக்கிறார்கள். ஒரே பள்ளியில் படித்து வரும் இவர்களது பெற்றோர்களும் நண்பர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் மீது ஒவ்வொரு கனவு. அதே சமயம், பள்ளி படிப்பை முடிக்கும் மூன்று பெண்கள், தங்களது வயது கோளாறில் காதல், டேட்டிங் போன்ற விசயங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள்.

இந்தப்போக்கு வளர்ந்து, செக்ஸ் மீதான க்யூரியாஸிட்டி அதிகரிப்பதை அடுத்து, எப்படியாவது ஒரு முறையாவது பாய் ஃபிரண்டுடன் உடலுறவை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒரு நாள், ஒரு திருமணத்துக்குப் போவதாக பெற்றோர்களிடம் பொய் சொல்லிவிட்டு, தத்தமது பாய் ஃபிரண்டுடன் காரில் கிளம்பிப் போகிறார்கள்.

ஆணுறை பாக்கெட் விற்ற மெடிக்கல் ஷாப் உரிமையாளர் மூலம் பெற்றோர்களுக்கு உண்மை தெரிய வர, அதிர்ச்சி அடைகிறார்கள். தங்கள் பிள்ளைகள் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் அவர்களைத் தடுத்து அழைத்து வந்துவிட வேண்டும் என்று அவசர அவசரமாக பிள்ளைகளை தேடிச் செல்கிறார்கள். இறுதியில் பிள்ளைகளா… பெற்றோர்களா… யார் விருப்பம் நிறைவேறியது? என்ற கேள்விக்கு விடை அளிக்கிறது ‘சிக்லெட்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

பாய் ஃபிரண்ட் கதாபாத்திரங்களில் வருணாக சாத்விக் வர்மா, சிக்குவாக ஜாக் ராபின்சன், ஆரோனாக ஓர் இளைஞர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். செக்ஸ் ஆர்வம் உந்தித்தள்ளும் இளைஞர் கதாபாத்திரங்களை இவர்கள் நிறைவாக செய்திருக்கிறார்கள்.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். வயது கோளாறில் தாறுமாறாக வாழ நினைக்கும் மூன்று பேர் பேசும் வசனங்களில் நிறைந்திருக்கும் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகள், உடல் மொழியில் கவர்ச்சி என படம் முழுவதும் காம நெடியை தூவியிருக்கிறார்கள்

2கே கிட்ஸ் என்றாலே அவர்கள் Dating செல்பவர்கள், மணமாவதற்கு முன்பே உடலுறவு வைத்துக் கொள்பவர்கள், காதலன் காதலி இருப்பதை ஒரு இமேஜ் ஆகப் பார்ப்பவர்கள், எந்த உறவுகளை எளிதாக முறித்துக் கொண்டு கடந்து போவர்கள் என்று தவறான ஒரு பிம்பத்தை சித்தரித்த்ததர்காகவே இன்றைய 2K கிட்ஸ் அனைவரும் இதுபோன்ற இயக்குநர்கள் மீது நீதிமன்றத்தில் ஒரு மானநஷ்ட வழக்கு தொடரலாம். அந்தளவிற்கு அறிவுரை என்ற பெயரில் விசயம் தெரியாதவர்களுக்கு கூட, இப்படிப்பட்ட சந்தோஷங்களை, இந்த வயதில் அனுபவிக்க வேண்டும், என்ற தவறான பாதையை காட்டும் வகையில் திரைக்கதை மற்றும் காட்சிகள் இருக்கின்றன.

கவர்ச்சி மற்றும் இரட்டை அர்த்த வசனங்களை ரசிப்பதற்கான தனி ரசிகர் வட்டம் இருந்தாலும், அதை ரசிக்கும்படி சொல்லாமல் முகம் சுழிக்கும் வகையில் சொல்லியிருப்பது படத்திற்கு பெரும் பலவீனம். காதல் மற்றும் காமம் இரண்டும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும், விவரம் தெரியாத வயதில் இரண்டிலும் சிக்கி மூழ்காமல், அதை கடந்து செல்ல வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் இயக்குனர் பெற்றோர்களும் தங்களது ஆசைகளை அவர்கள் மீது திணிக்காமல் அவர்களின் போக்கில் வாழ விட வேண்டும், என்று அவர்களுக்கும் அறிவுரை சொல்லியிருக்கிறார்.

கேட்பதும் கேட்காததும் படம் பார்ப்பவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுவோம்.