மறக்குமா நெஞ்சம் : விமர்சனம்


ரக்சன், தீனா, ஸ்வேதா ஆகியோர் பள்ளி படிக்கும்போது இருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள். திடீரென இவர்கள் 2008 ஆம் ஆண்டு பள்ளியில் எழுதிய பரிட்சையில் முறைகேடு நடந்துள்ளது என்றும் இத்தனை வருடங்கள் கழித்து அப்போது. படித்த மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வந்து படித்து தேர்வு எழுத வேண்டும் என்று தீர்ப்பு வருகிறது.

சிறுவயது முதல் பள்ளி தோழியை ஒரு தலையாக காதலிக்கிறார் நாயகன் ரக்‌ஷன். கடைசி வரை தன் தோழியிடம் காதலை கூறாமலேயே இருந்து விடுகிறார். தற்பொழுது இந்தத் தீர்ப்பு வெளியானதை அடுத்து குஷியான அவர் எப்படியாவது தன் காதலை இந்த தடவையாவது பள்ளிக்கு சென்று சொல்லி விட வேண்டும் என பழைய மாணவர்களோடு அதே பள்ளிக்கு மீண்டும் பொதுத்தேர்வு எழுத செல்கின்றார்.

போன இடத்தில் ரக்‌ஷன் தன் காதலை வெளிப்படுத்தினாரா, இல்லையா? இவர்களின் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி என்னவானது? என்பதே இப்படத்தின் மீதி கதை.
.
படத்தில் ரக்சன், தீனா இருவரின் காமெடியும் படத்தில் இருக்கிறது. குறிப்பாக, தீனாவின் நகைச்சுவை எல்லாம் கைத்தட்டல்களை வாங்கி இருக்கிறது. இவர்களுடன் முனீஸ்காந்தினுடைய காமெடியும் நன்றாக இருக்கிறது. இவர்களை அடுத்து ஸ்வேதா வேணுகோபால், மதீனா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்துள்ளனர்.

சச்சின் வாரியரின் இசையில் பாடல்கள் இதம். பின்னணி இசையும் சுகம். கன்னியாகுமரி சுற்றுவட்டாரப்பகுதிகளின் கொள்ளை அழகுகளைச் சுருட்டிக் கொண்டுவந்து திரையில் விரித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபிதுரைசாமி. கதை கதாபாத்திரங்களைத் தாண்டி காட்சிகள் நிலைக்கின்றன.

பத்து ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளிக்கு மறுதேர்வு எழுத வரும் மாணவர்களின் கதைக்களத்தில் காதல், மோதல், நட்பு, இழப்பு, மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என்று அனைத்தையும் கலந்து கொடுக்க நினைத்துள்ளார் இயக்குனர் ராகோ. யோகேந்திரன். அந்தவிதமாக ஒவ்வொரு பார்வையாளரையும் இப்படத்தினூடே அவர்களுடைய பள்ளிப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும் மேஜிக்கையும் இயக்குநர் நிகழ்த்தியிருக்கிறார்.