ஹிட்லர் ; விமர்சனம்


சென்னையில் வங்கி வந்தது வேலை பார்ப்பவர் விஜய் ஆண்டனி. அந்த நேரத்தில் திடீரென தேர்தல் வர ஏற்கனவே பலமுறை பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து தற்போது மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து இருக்கும் சரண்ராஜ் தன்னிடம் உள்ள பணத்தை இரைத்து தேர்தலில் ஜெயிக்க நினைக்கிறார். தனது தொகுதியான தேனி மாவட்டத்திற்கு அந்த பணத்தை அனுப்பி வைக்க அந்த பணம் யாரோ மர்ம நபரால் கொள்ளையடிக்கப்படுவதுடன் உடன் சென்றவர்களும் கொலை செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் ரயில் நிலையத்தில் நாயகி ரியா சுமனை பார்க்கும் விஜய் ஆண்டனி அவர் மீது காதல் கொள்கிறார். அடிக்கடி இவர்கள் சந்திப்பு ரயிலிலேயே நடக்கிறது. இந்த சந்திப்பு நடைபெறும் சமயங்களில் எல்லாம் இதுபோன்ற பண கொள்ளைகளும் கொலைகளும் நடக்கின்றன. இந்த வழக்கு குறித்து துப்புத்துலக்கும் அதிகாரி கௌதம் மேனனுக்கு ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனி மீது சந்தேகம் வருகிறது. உண்மையில் விஜய் ஆண்டனி தான் இதையெல்லாம் செய்தாரா ? அப்படி என்றால் அதன் பின்னணியில் என்ன காரணம் என்பதை விளக்குகிறது மீதிக்கதை.

ஒரு நாயகனாக தனது வழக்கமான பாணியில் இருந்து கொஞ்சம் மாறியுள்ள விஜய் ஆண்டனி இதில் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டு, காதல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் எந்தவித குறையும் இல்லாமல் நடித்திருக்கிறார். வழக்கமாக விஜய் ஆண்டனி படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் அதிகம் இருக்காது. ஆனால், இந்த படத்தில் கொஞ்சம் அதிகமாகவே அரசியல் பேசியிருக்கிறார்கள்

கமர்ஷியல் வேடம் தான் என்றாலும் பார்ப்பதற்கு அழகாகவும் தேவதையாகவும் காட்சி தந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார் நாயகி ரியா சுமன். வில்லத்தனத்தில் தனி முத்திரை பதித்திருக்கிறார் நடிகர் சரண் ராஜ். ஒவ்வொரு காட்சியிலும் தான் ஒரு சீனியர் என்பதை உணர்த்தும் சரண்ராஜ் இந்த படத்திற்கு பலம்..

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கெளதம் மேனன், தனது வழக்கமான பாணியில் தனது கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி திரைக்கதை ஓட்டத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார். தமிழ், ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் நவீன் குமார்.ஐ, லைவ் லொக்கேஷன்களில் காட்சிகளை படமாக்கிய விதம் படத்திற்கு சிறப்பு சேர்த்திருகிறது. விவேக் – மெர்வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மசாலாத்தனம் நிறைந்ததாக இருக்கிறது.

சிட்டிசன் போன்ற மக்கள் பிரச்சனையை கருவாக வைத்துக்கொண்டு கமர்ஷியல் ஆக்‌ஷன் ஜானரில் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் தனா. அதில் முதல் பாதியை விட இரண்டாம் பாதி திரைக்கதை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார். யூகிக்கக்கூடிய பழிவாங்கும் சக்தி மிகுந்த கதையாக நிறைய திருப்பங்களுடன் கொடுத்திருந்தாலும் இந்த திருப்பங்கள் அனைத்தும் தற்செயல் நிகழ்வாகத் தோன்றி அது நன்கு திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் என தெரிய வரும்போது உண்மையிலேயே அவை ட்விஸ்ட்டுகள் தான்.

பல படங்களில் பார்த்த கதை தான் என்றாலும், இன்னும் சுவாரஸ்யமான திரைக்கதையை கையாண்டிருக்கலாம்.