தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியில் உள்ள மலை கிராமம் ஒன்றுதான் கதைக்களம். அங்குள்ள பழங்குடிகளில் பலர், எந்தவித வசதியும் இல்லாத மலையை விட்டு, சமதளத்துக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் பூர்வ வாசனையைத் துறக்க முடியாமல் ஏழு குடும்பங்கள் மட்டும் மலையிலேயே வசிக்கிறார்கள்
படத்தின் நாயகன் குணாநிதி,ஒரு அடிபட்ட நாயைக் குணப்படுத்தி வளர்க்கிறார்.வேலை செய்யப் போன இடத்தில் அந்த நாயின் உயிருக்கு ஆபத்து.அதனால் தன் வாழ்நிலையையும் மறந்து வெகுண்டெழுகிறார்.அதனால் பல சிக்கல்கள்.அவை என்ன? அவற்றின் பின் நடப்பது என்ன? என்பனதாம் திரைக்கதை.
தர்மனாக நாயகன் குணாநிதி, இதற்கு முன் செல்ஃபி என்ற படத்தில் துணை ஹீரோவாக நடித்திருக்கிறார். அலங்கு திரைப்படமே ஹீரோவாக முதல் படம். கதையின் நாயகனாக முதல் படம் என்பது போல் இல்லாமல், அக்கதைக்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்து ஜொலித்திருக்கிறார் குணாநிதி.
மலையன் கதாபாத்திரத்தில் காளி வெங்கட். தனது உணர்வை இயல்பான நடிப்பு மூலம் கடத்தி விடுகிறார். ஒரு கையை இழந்து விட்டு கொலை வெறியோடு நாயகனை துரத்தும் கேரக்டரில் சரத் அப்பானி மிரட்டுகிறார்.
செம்பன் வினோத் மலையாளத்தில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர். அவருக்கு இதில் மிகப் பெரிய அளவுக்கு நடிப்பு இல்லை என்றாலும் அவர் நல்லவரா இல்லை கெட்டவரா என்று கேள்வி வரக் கூடிய அளவுக்கு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீரேகா, வித்தியாசமான தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார்.
சவுந்தர்ராஜா, சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், இதயக்குமார், மாஸ்டர் அஜய், கொட்ரவை, ஏஞ்சல், மஞ்சுநாத் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் முகம் காட்டுகிறார்கள்.
அஜீஷ் இசையில் பாடல்கள் பின்னணி இசை அற்புதம். சேசிங் காட்சிகளிலும், இரவில் காட்டில் நடக்கும் காட்சிகளிலும் பதட்டத்தை அதிகப்படுத்துகிறது பின்னணி இசை.
ஒளிப்பதிவாளர் பாண்டித்துரையும் பாராட்டுக்குரியவர். ஒவ்வொரு காட்சியிலும் முத்திரை பதிக்கிறார்
ஆக்ஷன் படம் என்றாலும், செல்லப்பிராணியான நாய் மட்டும் இன்றி யானை, நரிக்கூட்டம் என்று வன விலங்குகளையும் காட்சிகளில் பயன்படுத்தி சிறுவர்களையும் கவர முயற்சித்திருக்கும் இயக்குநர் சக்திவேல் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிருமே ஒன்று தான் என்ற ஒற்றை வார்த்தையை வைத்து, முழு படத்திற்கும் ஒரு உயிர் கொடுத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர்.