எல்ஐசி நிறுவனத்தில் பணிபுரிபவர் ஹரி கிருஷ்ணன். அவரது மனைவி லிஜோ மோல். இந்த நிலையில் லிஜோ மோலின் தோழியின் சகோதரி கிராமத்தில் இருந்து வேலை விஷயமாக சென்னைக்கு வந்து லிஜோமோலின் வீட்டில் தங்குகிறார். அப்போது மனைவி இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்கு வரும் ஹரி கிருஷ்ணன், அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கீழே விழுந்து மயக்கம் அடைகிறார் ஹரி கிருஷ்ணன்.
வீட்டிற்கு வரும் லிஜோமோல் இதை பார்த்து அதிர்ச்சி அடைய அதே சமயத்தில் ஹரி கிருஷ்ணனின் கள்ள காதலியான லாஸ்லியாவிடமிருந்து போன் வருகிறது. அதில் அவர் பேசுவதை கேட்ட லிஜோமோல், மயக்கத்தில் இருக்கும் தனது கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்கிறார். எனது வீட்டு பிரிட்ஜில் மறைத்து வைக்கிறார்/
அதன் பிறகு வந்த நாட்களில் ஹரி கிருஷ்ணனை காணவில்லை என லாஸ்லியா போலீசில் புகார் கொடுக்க, போலீசார் லிஜோமோலை வந்து விசாரிக்கிறார்கள். இந்த பிரச்சனையை எப்படி அவர் சமாளிக்கிறார் ? போலீசார் உண்மையை கண்டுபிடித்தார்களா ? அதன் பிறகு என்ன நடந்தது என்பது மீதிக்கதை.
சபல புத்தியோடு இருக்கும் நெகடிவ் கதாபாத்திரத்தில் ஹரி கிருஷ்ணன் சில காட்சிகள் வந்தாலும் படத்திற்கு முக்கிய ஆரம்ப புள்ளியாக அமைந்து அப்பாவியாக நடித்து அடப்பாவி என சொல்ல வைத்திருக்கிறார்.
கதையின் நாயகி பூரணியாக லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிறார். முதலில் கணவரை ஆராதிக்கும் சாதாரண குடும்பப் பெண்ணாய் வலம் வரும் அவர், தன் கணவர் செய்த தவறை அறிந்தவுடனே சற்றும் எதிர்ப்பார்க்காத விதத்தில் கணவரை வெட்டிக்கொன்று, பார்வையாளர்களை பதற வைத்துவிடுகிறார்
இன்னொரு நாயகியாக, லாஸ்லியா, ஆண் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்கும் பெண்கள் எப்படி இயிருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டான வேடம். அதை உணர்ந்து சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.
கட்சி பிரமுகரும் பேச்சாளருமான ராஜீவ் காந்தி, இப்படத்தில் போலீஸாக நடித்திருக்கிறார். மிகவும் இயல்பான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் ராஜீவ் காந்தி
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் கதைக்களத்தை விவரிக்கும் வகையில் உள்ளது. பின்னணி இசை கதைக்களத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்துள்ளது.
சம்பவம் ஒன்றை செய்துவிட்டு எப்படி இவ்வளவு ஈசியாக ஒரு பெண் கடந்து செல்ல முடியும்.? என்பதில் ஆரம்பித்து ஆங்காங்கே ஒரு சில கேள்விகளை எட்டிப் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.
அமைதியான வாழ்க்கையை விரும்பும் பெண், வெகுண்டெழுந்தால் எத்தகைய காரியத்தையும் துணிந்து செய்து விடுவாள் என்பதையும், ஏமாற்றும் ஆண்களால் பெண்கள் எத்தகைய துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை குடும்ப க்ரைம் த்ரில்லராக வடிவமைத்து திரைக்கதையில் சுவாரஸ்யத்தையும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜோசுவா சேதுராமன்.