நிறம் மாறும் உலகில் – விமர்சனம்


தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டியில் வைத்து தன் காதலனை மரியாதைக் குறைவாக நடத்திய அம்மாவிடம் கோபித்துக் கொண்டு ரயில் ஏறுகிறார் நாயகி லவ்லின். ரயிலில் அவரின் நிலையைப் பேச்சுக் கொடுத்து புரிந்து கொண்ட டிக்கெட் பரிசோதகர் யோகி பாபு இந்த உலகில் உறவுகள் எப்படி எல்லாம் சின்னா பின்னப் படுத்தப்பட்டுக் கிடக்கின்றன என்பதை நான்கு கதைகளின் மூலம் புரிய வைக்கிறார். நான்கு கதைகள் நான்கு கோணங்கள்.. அதை கேட்ட பிறகு, அந்தப் பெண் தன் அம்மா மீதான கோபத்தை கைவிட்டாரா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.

மும்பை தாதாவாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், பெற்ற பிள்ளைகளின் அன்பை தவறவிட்டு முதுமையில் தள்ளாடும் பாரதிராஜா – வடிவுக்கரசி இணை, கடலோர கிராமத்தில் நோயுடன் போராடும் அம்மாவை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் ரியோ ராஜ், காதலியா? அம்மாவா? என்ற புள்ளியில் அம்மாவை தெரிவு செய்யும் சாண்டி மாஸ்டர் – என ஒவ்வொரு கதாபாத்திரத்திலும், நடிகர்கள் தங்களின் நேர்த்தியான நடிப்பை வழங்கி ரசிகர்களை மகிழ்விக்கிறார்கள்.

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரபலமான நட்சத்திர முகங்கள் நிறைந்திருப்பதால் அனைவருமே தங்களின் அனுபவம் கலந்த நடிப்பை அளித்து, திரையை ஆக்கிரமித்து உணர்வு பூர்வமான தருணங்களை பார்வையாளர்களுக்கு எளிதாக கடத்தி படைப்பின் நோக்கத்தை பூர்த்தி செய்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் மல்லிகா அர்ஜுனன் மற்றும் மணிகண்ட ராஜு ஆகியோரது ஒளிப்பதிவு நேர்த்தி. இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகனின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசையும் ஓகே ரகம் தான்.

பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள பந்தத்தை, சிக்கல்களை, தாய் பாசத்தை உணர்வுப்பூர்மாக எழுதி இயக்கியிருக்கும் பிரிட்டோ ஜே.பி, நான்கு கதைகளையும் அம்மா செண்டிமெண்டோடு சொன்னது தவறில்லை, ஆனால் நான்கு கதைகளிலும் அளவுக்கு அதிகமான சோகத்தை பிழிந்திருபதை தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை