திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள காத்தூர் கிராமத்தை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டிற்குள் செல்பவர்கள் திரும்பி வராமல் மாயமாகி விடுவார்களாம். காரணம், அந்த காட்டில் மனிதர்களை பலி கேட்கும் மங்கை என்ற சூனியக்காரியின் ஆவி, முழு பவுர்ணமி இரவில் குளத்தில் குளிக்கும் ஏழு சப்த கன்னியர் இருப்பது தான் என்று அக்கிராம மக்கள் நம்புகிறார்கள்.
அந்த வகையில் உண்மை நிலையை கண்டறிய இரண்டு இளைஞர்கள் இரண்டு இளம் பெண்கள் உள்ளிட்ட நால்வர் குழு திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள ஜவ்வாது மலையில் அமைந்துள்ள காத்தூர் என்கிற காட்டுப்பகுதிக்குச் செல்கிறது. ஊர் மக்கள் சொன்னது போல் அங்கு சூனியக்காரியின் அமானுஷ்யம் இருந்ததா?, உண்மை அறிய காட்டுக்குள் சென்ற ஐந்து பேரின் நிலை என்ன ஆனது? என்பதை வித்தியாசமான திகில் ஜானரில் சொல்வது தான் ‘மர்மர்’.
ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். ஒரு காட்டுக்குள் சிக்கிக்கொண்டு பயத்தில் உரைந்து போகும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களையும் பதற வைக்கும் அளவுக்கு தங்களது பயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், இரவு நேரத்தில் மிக குறைந்த வெளிச்சத்தில் காட்சிகளை படமாக்கியிருந்தாலும், காட்சிகளை மிக தரமாக படமாக்கியிருக்கிறார். அதிலும் கேமராவில் பதிவு செய்யப்படும் காட்சிகளை கண்ணுக்கு உறுத்தாத வகையில் காட்சிப்படுத்தி திரைக்குள் இருக்கும் பயத்தை பார்வையாளர்களிடத்திலும் கடத்தியிருக்கிறார் அவருக்குக் கூடுதல் சவாலாக குறைந்த வெளிச்சத்திலேயே பெரும்பாலான காட்சிகள் இருக்கின்றன.அவற்றையும் தெளிவாகக் காட்ட முயன்றிருக்கிறார்.
இந்தப்படத்துக்கு இசையமைப்பாளரே இல்லை. அந்தப் பொறுப்பை ஏற்றிருப்பவர் ஒலி வடிவமைப்பாளர் கெவய்ன் பிரடெரிக்.அவரும் இயற்கை ஒலிகளைச் சரியாகப் பதிவு செய்து தேவைக்கேற்ப பயன்படுத்தி பயப்பட வைத்திருக்கிறார்.
வழக்கமான திகில் படங்கள் போல் அல்லாமல், ஒருவித பதட்டத்துடன் படத்தை பயணிக்க வைத்து, பயத்துடன் பார்க்கும்படி காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ரோஹித்,
Found Footage Horror படங்கள் ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் பரவலாக வந்திருந்தாலும், மர்மர் தமிழ் சினிமாவிற்கு முதல் அனுபவ முயற்சி. திகில் படங்கள் தமிழ் சினிமாவுக்கு புதியவை அல்ல என்றாலும், இந்த மர்மர் வித்தியாசமான அணுகுமுறையுடன் புதிய முயற்சியுடன் கொடுத்துள்ளார் இயக்குனர் ஹேம்நாத் நாராயணன்.