ஊருக்குள் எம்.எல்.ஏவின் மகனான திருமுருகன் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு ஆசைகாட்டி குறைந்த அளவு காசை கொடுத்து விளைநிலங்களை அபகரிக்கிறார். இதில் பணம் கிடைக்காத ஒரு விவசாயி தற்கொலை பண்ணிக்கொண்டு இறக்கிறார். இன்னொரு விவசாயியான கவுண்டமணி பொங்கி எழுந்து மக்களை ஒன்று திரட்டி விவசாய நிலங்களை எப்படி மீட்கிறார்..? இதற்காக ஒரு தேர்தலையே அவர் ஆயுதமாக எப்படி பயன் படுத்துகிறார் என்பதுதான் மீதிக்கதை
விவசாயி கடைசி வரை விவசாயியாகவே தான் இருக்கவேண்டும்.. காசுக்காகவும் கஷ்டத்துக்காகவும் விளைநிலங்களை விற்றுவிட்டால் பின்னாளில் அரிசியின் விலை தங்கத்தை விட உயர்ந்து நிற்கும் அபாயம் ஏற்படும் என்கிற கருத்தை சுளீர் என உரைக்கிற மாதிரி கவுண்டமணியை வைத்து சொல்லியிருக்கிறார்கள்..
அப்போதும் சரி… இப்போதும் சரி.. மோசமான அரசியல்வாதியையும் அரசாங்கத்தையும் விமர்சிக்க கவுண்டமணியை விட்டால் ஆளேது..? தனக்கு பிடித்த ஏரியா என்பதால் வார்த்தைகளால், வசனத்தால் சாட்டையை சுழற்றியுள்ளார் கவுண்டமணி.. ஆள் பார்க்க சற்றே சோர்வானது போல தெரிந்தாலும், அவரது நடிப்பும், குரலும் இப்பவும் நான்தான் ராஜா என பறைசாற்றுகின்றன.
திருமுருகன், மூணாறு ரமேஷ், வைதேகி, நான் கடவுள் ராஜேந்திரன் என பலரும் அவரவர் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள். கதை சொல்லப்படும் விதமும், பழைய விதமான காட்சியமைப்புகளும் படத்தின் சுவாரஸ்யத்தை குறைக்க முயற்சித்தாலும், அங்கெல்லாம் கவுண்டர் தோன்றி படத்தை இழுத்து பிடிக்கிறார்.. என்ன ஒன்று கவுண்டரின் காமெடி அளவை குறைத்து, அரசியல் நையாண்டியில் இறக்கிவிட்டுள்ளார்கள்.. ஆனாலும் அதையும் கவுண்டர் சொல்வதால் எடுபடவே செய்கிறது.
49 ஓ-வுக்கு எதுக்கு நான் ஓட்டுப் போடணும்… அதுக்கு ஓட்டுப் போட்டா என்ன பலன்? என்பதை மக்களுக்கு புரிகிற மாதிரி சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆரோக்கியதாஸ் முதல் படத்திலேயே விவசாய பிரச்சனையை கையில் எடுத்ததற்காகவும், அதை சொல்வதற்காக ஆல் இன் ஆல் கவுண்டரை மீண்டும் ரசிகர்களுக்கு தரிசனம் தரவைத்ததற்காகவும் இயக்குநர் ஆரோக்கியதாஸை தாரளமாக பாராட்டலாம்.
கவுண்டமணி ப்ளஸ் சொல்லப்பட்டுள்ள கருத்து இரண்டுக்கும் சேர்த்து தியேட்டர் பக்கம் நீங்கள் ஒரு விசிட் அடித்தே ஆகவேண்டும்.