தத்துக்குழந்தையாக வளர்ந்து வரும் தனது மகளை கண்காணித்து வரும் பேய் ஒன்று, வளர்ப்பவர்களின் சொந்த மகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்து, தனது மகளுக்கான அவர்களின் பாசம் குறைவதாக நினைக்கிறது. இதனால் அந்த பேய், வளர்ப்பவர்களின் உண்மையான குழந்தை முன் அவ்வப்போது காட்சி தந்து குழந்தையை பயமுறுத்துகிறது.
இந்த விபரம் தெரிந்த கணவன், தன் மனைவியிடம் பேய் பற்றிய விஷயத்தை சொல்லிப்பார்க்கிறான். அவள் நம்பாததால் தனது குழந்தையை தூக்கிக்கொண்டு தனி வீட்டிற்கு செல்கிறான். ஏற்கனவே குழந்தை விஷயத்தால் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்ந்த தம்பதியினர், தற்போது இதனால் மீண்டும் பிரிகின்றனர். தத்துக்குழந்தையை ஏதாவது அநாதை ஆசிரமத்தில் விட்டுவிட்டால் நாம் இணைந்து வாழலாம் என்கிறான் கணவன்..
ஆனால் இரண்டு குழந்தைகளுமே தனக்கு வேண்டும் என்கிறாள் மனைவி. அவளின் பெருந்தன்மையையும் பாசத்தையும் கடைசி நேரத்தில் உணர்ந்து கண்ணீர் விடுகிறது அந்த பேய்.. ஆனால் அப்போதுதான் அந்த துயர சம்பவம் நடக்கிறது. அது என்ன என்பதுதான் க்ளைமாக்ஸ்.
கணவன்-மனைவி, இரண்டு குழந்தைகள், ஒரு பேய், ஒரு அபார்ட்மென்ட் இதைவைத்து ஒரு விறுவிறுப்பான பேய்ப்படத்தை கொடுத்திருக்கிறார்கள். தம்பதியாக மனோஜ் கே.பாரதி மற்றும் ஷிரா இருவரும் பொருத்தமான தேர்வு.
சுட்டிக்குழந்தைகளாக நடித்துள்ள பேபி ஸ்ரீவர்ஷினி மற்றும் பேபி சாதனா இருவரின் படு யதார்த்தமான நடிப்புதான் படத்தின் மிகப்பெரிய பலம்.. பேயாக வரும் அஞ்சலி ராவ், அவர் வாங்கிய காசுக்கு அல்லது நாம் கொடுத்த காசுக்கு நம்மை மிரட்டி எடுக்கிறார்.
படத்தை விறுவிறுப்பாகத்தான் இயக்கியுள்ளார் இயக்குனர் டி.சுரேஷ்.. ஆனால் படம் பார்த்து முடிந்ததும் நமக்கு சில சந்தேகங்கள் எழுகின்றன. பேய் என்றால் யாரையாவது பழி வாங்கும் என்கிற மாயையை இதில் உடைத்திருக்கிறார். சபாஷ். ஆனால் தனது குழந்தையை பார்ப்பதற்காகவே அபார்ட்மென்ட்டை சுற்றிவரும் பேய், தனது மகளுக்கு போட்டியாக வந்து விட்டாள் என்பதற்காக இன்னொரு குழந்தையான அவந்திகாவை மிரட்டுவதில் லாஜிக்கே இல்லையே..?
அதுவும் தவிர, ஷிராவும் மனோஜும் இரண்டு குழந்தைகளையும் சரிசமமான அன்புடன் பார்த்துக்கொள்வதை பேயும் பார்க்கத்தானே செய்கிறது. பின் எதற்காக் அவந்திகாவை பயமுறுத்தி, அதனால் மனோஜையும் அவந்திகாவையும் வீட்டைவிட்டு வெளியேற வைக்கும்படி அதன் நடவடிக்கைகள் அமையவேண்டும்.? தேவையில்லாமல் தனது குழந்தையையும் அநாதை ஆசிரமத்தில் கொண்டுபோய் சேர்க்கும் சூழ்நிலைக்கு அவர்களை தள்ளவேண்டும்…?
இவ்வளவையும் நேரில் பார்க்கும் பேய், கடைசியாக, ஷிரா கார் ஓட்டும்போது மனோஜிடம், தத்துக்குழந்தையான அதிதி மேல் தான் வைத்திருக்கும் பாசத்தையும் அவளைவிட்டு தன்னால் பிரியமுடியாது என்பதையும் சொன்னபின் தான் உண்மையை உணர்வதாக காட்டுவது கொஞ்சம்.. இல்லையில்லை.. நன்றாகவே இடிக்கிறது.
மொத்தத்தில் இரண்டு மணி நேர திகில் படத்தில் ஒரு முட்டாள் பேயின் தரிசனத்தை பார்த்து நன்றாக பயந்துவிட்டு வரலாம்.. அதற்கு இந்த ‘பேபி’ கேரண்டி தருகிறது.