தில்லுக்கு துட்டு – விமர்சனம்


பேய்ப்படத்தில் காமெடியை நுழைப்பதற்கு பதிலாக காமெடிப்படத்தில் பேயை நுழைத்தால் எப்படி இருக்கும்.. அதுதான் இந்த ‘தில்லுக்கு துட்டு’.

சந்தானமும் ஷனயாவும் அஞ்சாம் கிளாஸ் படிக்கும்போதே பிரண்ட்ஸ்.. சூழ்நிலையால் சின்னவயதிலேயே சந்தானத்தை விட்டு பிரிந்து வெளிநாடு போன ஷனயா, வளர்ந்து வாலிபி ஆனபின் சந்தானத்தை தேடி சென்னை வருகிறார்.. சந்தனத்தை பார்த்ததும் லவ் ஸ்டார்ட் ஆகிறது. ஆனால் காதலுக்கு குறுக்கே நிற்கிறார் ஷனயாவின் தந்தை..

மகளின் காதல் தீவிரமாக இருப்பது கண்டு, சந்தானத்தை தீர்த்துக்கட்டிவிட்டு மகளை பிரிக்க திட்டம் போடுகிறார். அதற்காக ரவுடி நான் கடவுள் ராஜேந்திரனின் உதவியை நாட, அவரோ சந்தேகம் வராமல் தீர்த்துக்கட்ட வேண்டுமானால் பேய் செட்டப் தான் சரியான வழி என்கிறார். அதன்படி திருமணத்தை சாக்காக வைத்து சிவன் கொண்டை மலையில் உள்ள பங்களாவுக்கு இருவரின் குடும்பத்தையும் போகச்செல்லுகிறார்..

அங்கே பேய் செட்டப்பை உருவாக்கி சந்தானம் உள்ளிட்டவர்களை மிரட்டி பேய் இருப்பதாக நம்பவைக்கும் முயற்சியை நடத்துகிறார் ராஜேந்திரன்.. இந்தநிலையில் அந்த பங்களாவில் பெட்டி ஒன்றில் பல வருடங்களாக அடைபட்டு கிடந்த பேய் ஒன்று திடீரென கிளம்புகிறது.. சந்தானம் பொய்யான பேய் செட்டப்பை கண்டுபிடித்தாரா இல்லை, உண்மையான பேயிடம் சிக்கிக்கொண்டாரா என்பது க்ளைமாக்ஸ்.

ஹீரோ ஆவது என தீர்மானமாக முடிவு பண்ணிவிட்ட சந்தானம், இந்தப்படத்தில் அதற்கேற்ற வகையில் டான்ஸ், பைட், பாடி லாங்குவேஜ் என தன்னை டோட்டலாக மெருகேற்றி இருக்கிறார். அத்துடன் அவரது டைமிங் பஞ்ச்களும் சேர்ந்துகொள்ள ஆட்டம் சூடு பறக்கிறது.. நாயகி ஷனயா புதுமுகம் என்றாலும் கவர்ச்சியுடன் சேர்த்து கலக்குகிறார்.

ஆனந்தராஜ், கருணாஸ், நான் கடவுள் ராஜேந்திரன் மூவருமே தனித்தனியாகவும் காம்பினேஷனிலும் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கின்றனர். பேய் செட்டப்பை நான் கடவுள் ராஜேந்திரன் பயன்படுத்தும் காட்சிகள் செம லந்து.. அதிலும் அவர் தலையில் சந்தானம் மெழுகுவர்த்தி ஏற்றுகிறார் பாருங்கள்.. குழந்தை ரசிகர்களுக்கு செமையான ஜுகல்பந்தி காத்திருக்கிறது.. நாயகியின் அப்பாவாக வரும் சேட்ஜியும் தன பங்கிற்கு வில்லத்தனத்தால் சிரிக்க வைக்கிறார்.

ரசிகர்களை இடைவிடாமல் சிரிக்க வைப்பது என தீர்மானமான முடிவெடுத்து அதற்கான களத்தில் இறங்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ராம்பாலா.. ரிசல்ட்டும் இயக்குனர் ராம்பாலாவுக்கு ஷொட்டு, சந்தானத்துக்கு ஹிட்டு என்பதாகத்தான் அமைந்திருக்கிறது.