அட்ரா மச்சான் விசிலு – விமர்சனம்


சினிமா ஹீரோவை ஆராதிக்கும் ரசிகன் என்கிற அனைவருக்கும் தெரிந்த கதைக்களத்தில் ஜாலியான படமாக அதேசமயம் ஒரு கருத்தையும் சொல்ல இந்தப்படத்தில் முயற்சித்திருக்கிறார்கள்.

தமிழ்சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வலம்வரும் பவர்ஸ்டாருக்கு மதுரையை சேர்ந்த சிவா, சென்ராயன், அருண்பாலாஜி என மூன்று வெறித்தனமான ரசிகர்கள். ஒருகட்டத்தில் சொந்தமாக பிசினஸ் நடத்த முடிவுசெய்து பவர்ஸ்டார் நடித்த படம் ஒன்றின் மதுரை உரிமையை வாங்கி படத்தை திரையிடுகின்றனர்.

படம் பிளாப் ஆகவே, நேராக பவர்ஸ்டாரிடம் சென்று நஷ்ட ஈடு கேட்கின்றனர். ஆனால் அவரோ பணம் தர மறுத்து அவர்களை திட்டி அனுப்புகிறார்.. நடிகரின் உண்மை முகம் கொண்டு அதிர்ந்துபோன மூவரும் அவருக்கு பாடம் புகட்டி, தங்களது பணத்தை திரும்ப பெரும் முயற்சிகளில் இறங்குகிறார்கள்.. அவர்களால் அதை சாதிக்க முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

நடிகர்களின் வெறித்தனமான ரசிகர்களாக இருந்துகொண்டு இன்றும் பல இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை எப்படி தொலைக்கிறார்கள் என்பதையும் ரசிகர்களாக கட் அவுட், பாலாபிஷேகம் என அலப்பறை கொடுத்து, பின்னர் பவர்ஸ்டாரால் பாதிக்கப்பட்டு அவருக்கு எதிராக பொங்குவதையும் சிவா, சென்ராயன், அருண்பாலாஜி ஆகிய மூவருமே பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட வில்லத்தனம் கலந்த கேரக்டரில் பவர்ஸ்டார் அடிக்கடி உதிர்க்கும் அதிரடி பஞ்ச் டயலாக்குகளால் தியேட்டரை கதிகலக்குகிறார். கதாநாயகி நைனா சர்வாரின் அழகு முகத்தை விட, சிவாவின் மீது அவர் வைத்திருக்கும் அளவு கடந்த காதல், அவர்மீது நம்மை பாசப்பார்வை வீச வைக்கிறது.

பவர்ஸ்டாரின் பி.ஏவாக வரும் சிங்கமுத்துவின் பந்தா, காமெடி தான் என்றாலும் கொஞ்சம் ஓவர் டோஸ் தான். கதாநாயகியின் அப்பாவாக வரும் இயக்குனர் செல்வபாரதி, போலீஸ் அதிகாரியாக வரும் ராஜ்கபூர் இருவருமே மதுரைக்காரர்கள் இப்படியும் இருப்பார்களா என ஆச்சர்யமூட்டும் விதமாக பாந்தமாக நடித்திருக்கிறார்கள். சிங்கமுத்துவின் மனைவியாக வரும் மதுமிதா காமெடி நடிப்பில் பொளந்து கட்டுகிறார். மன்சூர் அலிகானை வேஸ்ட் செய்திருக்கிறார்கள்.

படத்தின் இன்னொரு முக்கிய பலம் என்.ஆர்.ரகுனந்தனின் இசை. அங்காங்கே வரும் மெலடியான பாடல்கள் நம்மை வருடி செல்கின்றன. ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி காட்சிகளை மெருகேற்றி இருக்கிறார்..

இயக்குனர் திரைவண்ணன் ஜாலியாக ஒரு படத்தை தர முயற்சி செய்து இருப்பது நன்றாகவே தெரிகிறது. அதற்கு நடிகர் ரசிகன் என்கிற ஏரியாவும் ஓரளவு கைகொடுக்கிறது.. ஆனால் படத்தில் வரும் பல காட்சிகளை பார்க்கும்போது, இந்தப்படம் உச்ச நடிகர் ஒருவர் மீதான தனிப்பட்ட தாக்குதலை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது என்பதே உண்மை.. ரசிகன் என்பவன் எந்த எல்லைக்கோட்டுக்குள் இருக்கவேண்டும் என ஒரு கருத்தை வலியுறுத்தியதற்காக வேண்டுமானால் இயக்குனரை பாராட்டலாம்.