கெத்து – விமர்சனம்


தமிழக கேரள பார்டரான குமுளியில் வசிக்கும் உதயநிதி அங்கே உள்ள நூலகத்தில் வேலை பார்க்கிறார். அவரது அப்பா சத்யராஜ் ஒரு பள்ளியின் பி.டி.மாஸ்டர். பள்ளிக்கு எதிரில் பார் நடத்தும் மைம்கோபி மீது போலீசில் புகார் கொடுக்க, அவரோ சத்யராஜின் வீட்டைப்பூட்டி அவரை பாருக்கு வரவழைத்து தாக்குகிறார். இதில் உதயநிதி தலையிட்டு மைம் கோபியை அடித்து நொறுக்குகிறார்.

இனி பாரை திறந்தால் கொன்றுவிடுவேன் என எச்சரித்த நிலையில் சில தினங்களில் மைம் கோபி கொல்லப்பட போலீஸ் சத்யராஜை அரெஸ்ட் செய்கிறது. தந்தையை காப்பாற்ற களம் இறங்கும் உதயநிதிக்கு, தனது நூலக ஆசிரியரை கொல்ல விக்ராந்த் மூலமாக வெளிநாட்டு சதி முயற்சி நடப்பது தெரிய வருகிறது. இந்தப்பிரச்சனையை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மீதிப்படம்.

முந்தைய படங்களின் அனுபவமோ என்னவோ உதயநிதி இதில் தன் நடிப்பை சற்று மெறுகேற்றி இருக்கிறார். ஆனாலும் உதயநிதிக்கு சீரியஸ் ரோல் பொருந்தவில்லை அவர் நகைச்சுவை கலந்த கதாநாயகனாகவே கலக்கி இருக்கலாம்.. கதையில் எமி ஜாக்சனும் அவரது கதாபாத்திரமும் பொருந்தவில்லை என்பதும் அவர் எமி ஜாக்சன் என்பதற்காகவே படத்தில் இணைக்கப்பட்டுள்ளார் என்பதும் அவரது செயற்கையான நடிப்பிலேயே தெரிகிறது.

பாசமான அப்பா, பொறுப்பான விளையாட்டு மாஸ்டராக படத்தில் சத்யராஜ் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். புதியதொரு பரிமாணத்தில். வில்லனாக விக்ராந்த் வருகிறார். புரொபெஷனல் கில்லர் என்பதால் வசனங்களும் குறைவுதான். இருந்தாலும் பார்வையால் மிரட்டுவதில் தேர்கிறார். குணச்சித்திரம் ப்ளஸ் காமெடியில் மிளிர்கிறார் கருணாகரன்.

சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம். கேரள பகுதியில் படமாக்கப்பட்டுள்ளதால் கண்களுக்கு நல்ல குளிர்ச்சியை தருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் புதிதாக எதுவும் இல்லை.. தொடர்ந்து வரும் பாடல்களும் இம்சை ரகம் தான் வித்தியாசமான கதையை கொண்டு களம் இறங்கியிருக்கிறார் டைரக்டர் திருக்குமரன். திரைக்கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருந்தால் கூடுதல் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.