ஜித்தன்-2 ; விமர்சனம்


தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக கொடைக்கானலில் சொந்தமாக பங்களா ஒன்று வாங்குகிறார் ஜித்தன் ரமேஷ். ஆனால் அந்த வீட்டில் அவரை வசிக்கவிடாமல் துரத்துகிறது…. ஸாரி துரத்துகிறார் பேயாக இருக்கும் சிருஷ்டி டாங்கே.. போலீஸ், மந்திரவாதி என பலரை வைத்தும் பேயை விரட்ட முடியாமல் போகவே, மயில்சாமியின் யோசனைப்படி பேயிடமே நியாயம் கேட்டு சரண்டர் ஆகிறார் ஜித்தன் ரமேஷ்,,

அது தன்னுடைய வீடு என்றும் ஒரு விபத்தில் இறந்த தன்னை, தனது காதலன் என்றாவது ஒருநாள் தேடி வருவான் என அந்த வீட்டிலேயே இருப்பதாகவும் காரணம் சொல்கிறார்.. பெண் என்றால் பேயும் இறங்கும்.. பெண் பேய் என்றால் ஜித்தனும் இறங்குவார் தானே..? அவர் என்ன செய்தார் என்பது க்ளைமாக்ஸ்.

நிச்சயம் இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழ்சினிமாவில் பேய்க்(கதை)கான வறட்சி ஏற்பட்டுவிடும் என்பது இந்தப்படத்திலேயே தெரிகிறது.. பேயை அகோரமாக காட்டுவதா, அழகாக காட்டுவதா, சீரியஸாக காட்டுவதா, சிரிக்கும்படி காட்டுவதா என கதாசிரியர் வின்சென்ட் செல்வா படம் முழுவதும் குழப்பியடிக்கிறார்..

ஜித்தன் ரமேஷுக்கு என்னவோ பொருத்தமான கேரக்டர் தான்.. பேயை பார்த்து பயந்து நடுங்கும் காட்சிகளிலும், பேயிடம் உதார் விடும் காட்சிகளிலும் ‘அட’ என வியக்கவைக்கிறார்… கன்னக்குழி அழகி சிருஷ்டியை பேயாக மாற்றிவிட்டார்களே.. இடைவேளைக்குப்பின் சிருஷ்டி தான் அந்த பேய் என காட்டியவர்கள், இடைவேளைக்கு முன்பிருந்தே அவரை காட்டியிருந்தால் குறைந்தா போயிருப்பார்கள்.. பேய்களே ஏற்றுக்கொள்ளாத ஒரு உருவத்தை பேயாக காட்டி படுத்தி எடுக்கிறார்கள்.

சீரியசான கதையில் ரோபோ சங்கர், மயில்சாமி, யோகிபாபு மூவரும் தான் சற்றே ரிலாக்சேஷன் தருகிறார்கள்.. மொட்ட ராஜேந்திரனுக்கு பிறகு யோகி பாபு திரையில் வந்தாலே கைதட்ட ஆரம்பித்து விட்டார்கள் ரசிகர்கள்.. ஒரு குத்துப்பாட்டுடன் ஒதுங்கிக்கொள்கிறார் இசையைப்பாளர் ஸ்ரீ. இயக்குனர் ராகுல் பரமஹம்சா இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் மாற்றம் செய்து விறுவிறுப்பையும் மிரட்டலையும் கூட்டியிருக்கலாம் என்கிற எண்ணம் தான் படம் முடிந்ததும் ஏற்படுகிறது.