இப்படியெல்லாம் நடக்குமா என நினைக்க வைக்கிற ஹாலிவுட் பேண்டசி வகை கதையை தமிழுக்கு முதன்முதலாக மாற்ற முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன்.. ஒர்க் அவுட் ஆகியிருக்கிறதா..?
ஊட்டியில் தெரியாமல் கெமிக்கல் ஒன்றை குடிக்கும் நாய்க்கு வெறி பிடித்து மனிதர்களை கடிக்கிறது.. கடிபட்டவர்களுக்கும் வெறி ஏறி கண்ணில் எதிர்ப்படுபவர்களை எல்லாம் கடிக்கிறார்கள்.. ட்ராபிக் போலீஸான ஜெயம் ரவி, அவரது தங்கை பேபி அனிகா, காதலி(க்கும்) லட்சுமி மேனன், நண்பனான இன்னொரு ட்ராபிக் போலீஸ் காளி வெங்கட் அனைவரும் இந்த தாக்குதலில் இருந்து தப்பி, இதற்கான மாற்று மருந்தை கண்டுபிடிக்க கோவைக்கு விரைகிறார்கள்..
கோவையிலும் நிலவரம் இதேபோல கலவரமாக ஆகியிருக்க, அங்கிருக்கும் மிருக மனிதர்களிடம் சிக்கிக்கொள்கிறார்கள்.. ஜெயம்ரவியால் தனது குழுவை காப்பாற்ற முடிந்ததா..? இதற்கான மருந்தை கண்டுபிடித்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.
இதுபோன்ற கதையில் நடிக்கும் ஆர்வம் உள்ளதால் மட்டுமே இந்தப்படத்தை ஜெயம் ரவி ஒப்புக்கொண்டது போலத்தான் தெரிகிறது.. பிரச்சனையின் தீவிரத்தை பொறுத்து அவரது ஆக்சன் அவதாரம் உக்கிரமானாலும் இடைவேளைக்குப்பின் அவரது உழைப்பு நன்றாகவே வீணடிக்கப்பட்டு இருக்கிறது.
யாரோ ஒருவருக்கு நிச்சயம் ஆனாலும், ஜெயம் ரவியின் மானசீக காதலியாக வரும் லட்சுமி மேனனின் டீச்சர் டைப் நடிப்பு இதிலும் தொடர்கிறது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் மீது இறக்கம் காட்டி, பின்னர் அவர்களிடம் மாட்டிக்கொண்டு அலறும்போது சிரிக்க வைக்கிறார். காளி வெங்கட், பேபி அனிகா இருவரும் சாந்தமான, பாந்தமான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.. ஆர்.என்.ஆர் மனோகர் இந்தமுறை காமெடியில் இறங்கி நம்மை ‘அட’ என ஆச்சர்யப்படுத்துகிறார்.
நாய்க்கடியால் மனிதர்கள் பாதிப்புக்கு ஆளாவதால் ஊட்டி நகரின் உள்ளேயும் வெளியேயும் யாரையும் விடாமல் போலீஸார் தடைபோடுகிறார்கள். அதேசமயம் ஜெயம் ரவி குழு மினிஸ்டர் ஆர்.என்.ஆர் மனோகரின் தயவால் கோவை செல்கிறது.. ஒகே,.. ஆனால் ஊட்டியைத்தாண்டி கோவையிலும் இந்த நாய்க்கடி மனிதர்கள் ஆயிரக்கணக்கில் உருவானது எப்படி..? அதுபற்றிய தகவல் மினிஸ்டருக்கு கூட தெரியாமல் போனது எப்படி..?
லட்சுமி மேனனின் வருங்கால கணவரான கோவையில் இருக்கும் டாக்டர் கூட அவருக்கு இதை போனில் சொல்லாமல் விட்டது எப்படி..? இந்த ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு தண்ணீர் அலர்ஜி என தெரிந்தும் அதன்மூலம் அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியை கிளைமாக்ஸில் மட்டும் பெயரளவுக்கு பயன்டுபடுத்தி இருப்பது ஏன்..? அதிரடி போலீசார்களை களம் இறக்காதது ஏன்..?
இப்படி பல ‘ஏன்’களுக்கும், ‘எப்படி’க்களுக்கும் விடைதெரியாமலே முழிக்கும் ரசிகனுக்கு இதில் இரண்டாம் பாகம் தொடரும் என என்ட் கார்டு போட்டு முதுகில் அடித்து வெளியே அனுப்புகிறார்கள்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் மிஸ்டர் ஜெயம் ரவி.