நட்பதிகாரம் – விமர்சனம்


மிடில் கிளாஸ் ஜீவா மீது கோடீஸ்வரி பூஜா காதலாகிறார்.. இன்னொரு பக்கம் லண்டன் தொழிலதிபர் மகன் அரவிந்த், கோவில் ஐயர் (எம்.எஸ்.பாஸ்கர்) பெண்ணான மகாவை டீப்பாக லவ் பண்ணுகிறார்… இந்த இரண்டு ஜோடிகளும் ஒரு கட்டத்தில் நட்பாகி, நால்வரும் நகமும் சதையும் ஆகின்றனர்.

இந்தநிலையில் நண்பர்கள் அரவிந்தை உசுப்பேற்றிவிட, மகா தன்னைவிட்டு பிரிந்துவிட கூடாது என்கிற நோக்கில் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணுவதற்காக மகாவை மறுநாள் பத்திர அலுவலகம் வரச்சொல்கிறார் அரவிந்த். ஆனால் அன்றிரவே தனது தந்தை லண்டனில் போலீசில் சிக்கிய தகவல் வர சொல்லாமல் கொள்ளாமல் உடனே லண்டன் கிளம்புகிறார் அரவிந்த்.

மறுநாள் கலை கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் மகா. இந்த செய்தி அறிந்து அவரது தந்தை ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.. இந்தநிலையில் ஜீவாவின் உதவியை நாடுகிறார் மகா. ஜீவா மட்டுமல்லாமல், அவரது குடும்பமும் சேர்ந்து உதவி செய்ய மாகாவின் தந்தை பிழைக்கிறார். மகாவைத்தான் ஜீவா விரும்புவதாக நினைத்து, ஜீவா வேலைக்காக ஹைதராபாத் சென்றிருந்த சமயத்தில், சஸ்பென்ஸ் பண்ணுவதாக நினைத்து இரண்டு வீட்டு பெரியவர்களும் இருவருக்கும் திருமண நிச்சயம் செய்து விடுகின்றனர்..

இந்த செய்தி அறிந்து ஜீவா, மகா ஒரு பக்கம் அதிர்ச்சியாக, இன்னொரு பக்கம் இந்த நிச்சயதார்த்த தகவலை கேள்விப்பட்டு இருவரது காதலர்களும் தவறாக அர்த்தம் புரிந்துகொண்டு இவர்களை விட்டு விலகுகின்றனர்.. இவர்கள் இருவர் தரப்பு நியாயத்தையும் கேட்க மறுக்கின்றனர். இந்த நிலையில் மகாவின் தந்தைக்கு இந்த உண்மை தெரியவருகிறது… பெற்றோருக்காக காதலர்கள் ஜோடி மாறி திருமணம் செய்தார்களா..? இல்லை காதலர்களின் மனம் மாறி அவர்களுடன் இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.

ஜீவா (ராஜ்பரத்), அரவிந்த் (அம்ஜத்ஜான்), மகா (ரேஷ்மி மேனன்) மற்றும் பூஜா (தேஜஸ்வி) என நால்வரின் நடிப்பில் எந்த குறையும் இல்லை. ஆனால் அவர்களது கேரக்டரை வடிவமைத்ததில் தான் இயக்குனர் ரவிச்சந்திரன் நிறையவே சொதப்பியிருக்கிறார்.

நண்பர்களின் பேச்சைக்கேட்டு ரேஷ்மி மேனனை ரிஜிஸ்தர் ஆபீஸுக்கு மறுநாள் காலை வரசொல்லும் அம்ஜத்கான், அன்றிரவே திடீரென லண்டன் கிளம்புவதால் ரேஷ்மிக்கு ஒரு போன்கால், அட்லீஸ்ட் ஒரு மெசேஜ் செய்து தகவலை சொல்லியிருக்கமுடியாதா என்ன..?

சரி.. மறுநாள் காலை வீட்டை விட்டு கிளம்பும் ரேஷ்மி, ஓடிப்போவது போல கடிதம் எழுதி வைத்து விட்டு கிளம்புவது பத்து வருடத்துக்கு முந்தி காதலர்கள் பண்ணிக்கொண்டிருந்த அபத்தம். இன்றைய சூழலில் இப்படி கிளம்புபவர் தனது காதலனுக்கு போன் செய்து உறுதிப்படுத்திக்கொண்டல்லவா கிளம்பியிருக்க வேண்டும்..

அதேபோல திரும்பி வந்த காதலனுக்கு ரேஷ்மியின் நிச்சயதார்த்த விஷயம் மட்டும் யார் மூலமாகவோ தெரியும்போது, அதற்குமுன் நடந்தது என்ன தெரிந்துகொள்ளும் வாய்ப்பு மட்டும் எப்படி இல்லாமல் போகும்..? சரி.. அதை விடுங்கள்.. ரேஷ்மியும், ராஜ் பரத்தும் உண்மையை சொல்ல வரும்போதெல்லாம் அம்ஜத்கானும் தேஜஸ்வியும் இருவரையும் பேசவிடாமல் வெட்டி அனுப்புவது ரொம்பவே டூமச்..

அப்புறம் எப்படி க்ளைமாக்ஸ் வரை படத்தை நகர்த்துவது என இயக்குனர் நினைத்துவிட்டார் போலும்.. இதில் இரண்டு வீட்டாரும் தங்களது பிள்ளைகளிடம் கேட்காமல் தாங்களாகவே மனதில் ஒன்றை நினைத்துக்கொண்டு நிச்சயதார்த்தம் பண்ணுவதெல்லாம் சிவாஜி காலத்து பார்முலா. தகவல் தொடர்பு சாதனங்கள், வசதிகள் அத்தனையையும் வசதியாக மறந்துவிட்டு திரைக்கதையை பதினைந்து வருடத்திற்கு முன்பு இருந்த காலகட்டத்திற்கு அமைத்து ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து அனுப்புகிறார் இயக்குனர் ரவிச்சந்திரன்.

இன்றுவரை தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பானாலும் விரும்பி பார்க்கக்கூடிய ‘கண்ணெதிரே தோன்றினாள்’ என்கிற கிளாசிக் படத்தை இயக்கிய அந்த ரவிச்சந்திரனா இவர்..? அய்யோ பாவம்..

நட்பதிகாரம்-79 ; போதுமடா சாமி.. ஆளை விடுங்க..!