சினிமாவை கதைக்களமாக வைத்து படம் எடுப்பது தமிழ்சினிமாவில் ரிஸ்க்கான காரியம் தான்.. ஆனால் தனது அறிமுகப்படத்திலேயே அதில் இறங்கி வெற்றிகண்ட ராதாமோகன் மீண்டும் ஒருமுறை அசட்டு துணிச்சல் காட்டியிருக்கிறார்.
பிளாப் படம் கொடுத்து சோர்ந்துபோன இயக்குனர் கருணாகரன். அவருக்கு மேனேஜர் மயில்சாமி மூலமாக, காசிமேடு ‘அய்யா’ எம்.எஸ்.பாஸ்கர் தயாரிக்கும் படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்கிறது ஹீரோயின் அவரது மகள் நந்திதா என்கிற கண்டிஷனுடன்.. சுட்டுப்போட்டாலும் நடிப்பே வராத நந்திதாவை வைத்து படத்தை எடுத்தாரா இல்லையா என்பது தான் மீதிப்படம்.
கருணாகரன், சாம்ஸ், மயில்சாமி, நாராயணன், டவுட் செந்தில், டாடி சரவணன் என காமெடிக்கு தோதான ஆட்களை செட் பண்ணி கூட்டணி அமைத்து தனது ஆஸ்தான நடிகர் குமரவேலையும் கோர்த்து விட்டதெல்லாம் சரியான விஷயம் தான். அதிலும் எம்.எஸ்.பாஸ்கர் கேரக்டர் வடிவமைப்பு நன்றாகவே இருக்கிறது. நந்திதா தான் ‘லூசுப்பெண்ணே’ கதாபாத்திரத்தை ஓவர் ஆக்டிங்கால் கெடுத்துவிட்டாரோ என தோன்றுகிறது..
படம் பார்த்து முடித்ததும் நம்முள் தோன்றும் கேள்விகள் இவைதான்.
காமெடி நடிகர்கள் நடித்திருந்தாலும் சினிமா வாய்ப்பு என்கிற சீரியசான கதையை கையில் எடுத்த ராதாமோகன், படத்தில் ஒரு இயக்குனர் டீமை காட்டியிருக்கிறாரே.. நிஜத்தில் அசிஸ்டன்ட் டைரக்டர் டிபார்ட்மெண்ட் அப்படித்தான் இருக்கிறதா.? ஏன் இவரது டீமில் உள்ள உதவி இயக்குனர்கள் எல்லாம் கோணங்கித்தனமாகத்தான் வேலை பார்ப்பார்களா..?
காமெடி என்கிற பெயரில் ஒரு அராத்துவை (டவுட் செந்தில்) சேர்த்தது கூட பரவாயில்லை. ஆங்கில வார்த்தை மிஸ்டேக் காமெடி என்கிற பெயரில் கொலை செய்வத்தைதான் ஏற்க முடியவில்லை. பி.ஏ படிச்சவனுக்கு கன்ப்யூஸ், கன்சீவ் வித்தியாசம் கூடவா தெரியாது.. காமெடி ரொம்பவே வறட்சி சார்..
நடிப்பே வராத நந்திதாவை வைத்து ரிகர்சல் பண்ணும் கருணாகரன், அவர் ஆரம்பத்தில் இருந்து சரியாக நடிக்காத பட்சத்தில் இடைவேளை வரை ரிகர்சல் கொண்டுவருவது ஏன்..? ஒருவேளை தமிழ்சினிமாவில் வெளியாகும் உப்புமா படங்கள் எல்லாம் இப்படித்தான் உருவாகின்றன என காட்டியிருப்பதாக எடுத்துக்கொள்ளலாமோ..?
தவிர டிஸ்கஷன் மற்றும் ரிகர்சல் காட்சிகளை காட்டிக்கொண்டே இருப்பது ஒரு கட்டத்தில் போரடிக்கிது சார். டவுட் செந்திலிடம் கேரள சேட்டன் ஒருவர் அடிக்கடி பாடிக்காட்டுவதாக காமெடி என்கிற பெயரில் காட்சி வைத்திருப்பது உங்களுக்கே காமெடியாக தெரியவில்லையா ராதாமோகன் சார்.?
சரி.. படத்தில் ப்ளஸ் பாயிண்ட்டுகளே இல்லையா..? மயில்சாமி எப்போதும் சகுனம் பார்ப்பது, எம்.எஸ்.பாஸ்கர் கவிதை சொல்வது, க்ளைமாக்ஸில் நந்திதா மூலம் ட்விஸ்ட் வைத்து கருணாகரன் டீமுக்கு ரிவீட் அடிப்பது என ஆங்காங்கே சில நல்ல விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. கருணாகரன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சதீஷ், அப்படியே கௌதம் கார்த்திக்கின் கலர் ஜெராக்ஸ் காபி.. துருதுரு நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். க்ளைமாக்சை ஒட்டிய இருபது நிமிடம் பரபரப்பு. இருந்தாலும் இது மட்டும் போதாதே..
‘மொழி’, ‘அபியும் நானும்’ படங்களை கொடுத்த ராதாமோகனா இந்தபடம் பண்ணியது என்கிற ஆச்சர்யம் படம் முழுதும் தொடர்கிறது. மொத்தத்தில் ராதாமோகன் தன்னை அப்டேட் பண்ணிக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறார் என்பதைத்தான் ‘உப்புக்கருவாடு’ வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.