பரத்-விஷால்-சிம்புவை பார்த்து தனுஷ் சுதாரிப்பாரா..?


பெயருக்கு முன்னாள் பட்டம் சேர்த்துக்கொண்டால் தான் கெத்து என வாங்கி கொடுத்த பிரியாணிக்கு விசுவாசமாக யாராவது சூடம் ஏற்றி கொளுத்தி விட, அருள் வந்து ஆடாத குறைய நம்ம ஊர் ஹீரோக்கள் பட்டம் வைத்துக்கொள்ள படும் பாடு இருக்கிறதே.. அட.அட.. இரண்டு மூன்று படம் வரிசையாக ஓடினால் உடனே உடனே பட்டம் போட ஆசை வந்துவிடுகிறது..

விஷாலின் கேரியர் நன்றாக போய்க்கொண்டு இருந்தபோது தான், அடிப்பொடிகள் “அண்ணே பட்டம் போட்டுக்குங்க அண்ணே” என உசுப்பேற்றி ‘புரட்சி தளபதி’ என ஒரு பட்டத்தையும் சூட்டினார்கள். அன்றைக்கு பிடித்தது சனியன்.. சத்யம், தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை என வரிசையாக விஷாலின் படங்கள் மண்ணை கவ்வின. இதனை லேட்டாக புரிந்துகொண்ட விஷால் நாசூக்காக பட்டத்தை ஒதுக்கி விட்டார்.

இந்த பரத் இருக்கிறாரே.. காதல், வெயில், எம் மகன் என்கிற மூன்று படங்கள் தான் இவரது கேரியரில் சொல்லிக்கொள்ளும்படியான படங்கள்.. அதற்கே தனக்கு சின்ன தளபதி என பெயர் சூட்டிக்கொண்டார்.. எந்த போருக்கு போய்வந்தாரோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். பட்டம் பரத்தையும் கவிழ்க்க தவறவில்லை..

சிம்பு கதை நமக்கு தெரிந்ததே, யங் சூப்பர்ஸ்டார் என பட்டத்தை சூட்டிக்கொண்டு அவர் படு(த்து)ம் பாடு இருக்கிறதே.. கடந்த ஆறேழு வருடங்களில் வெளியானதே மூன்று படங்கள் தான்.. அதுவும் அட்டர் பிளாப் ரகம் தான்.

இப்போது இவருக்கு போட்டியாக இளைய சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தை தனுஷுக்கு சூட்டியிருக்கிறார்கள்.. சூப்பர்ஸ்டாருக்கும் இளைய சூப்பர்ஸ்டாருக்கும் என்ன வித்தியாசமோ.. அது அவர்களுக்கு மட்டுமே தெரியும்..

இதுநாள் வரை முதலுக்கு மோசமில்லாமல் வெற்றிப்பாதையில் தான் போய்க்கொண்டு இருக்கிறார் தனுஷ்.. இனி பட்டம் இவரையும் என்ன பாடு படுத்த போகிறதோ..? தனுஷ் சுதாரித்து ஆரம்பத்திலேயே இதையெல்லாம் விலக்குவாரா..? இல்லை பட்டுத்தான் திருந்துவாரா..? பார்க்கலாம்.