கதையின் நாயகன் மார்டின் (S.P, சித்தார்த்) ஊட்டியில் உள்ள ஒரு டீ எஸ்டேட்டில் மேனேஜராக வேலை செய்கிறார். இவருக்கு அப்பா அம்மா, யாரும் இல்லை லீனா (சைதன்யா ப்ரதாப்) என்ற அன்பான மனைவி உள்ளார். லீனாவுக்கும் அப்பா, அம்மா யாரும் இல்லை. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டு சந்தோசமாக வாழ்கின்றனர்.
மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக கணவனான ஹீரோ மனைவி தனிமையில் இருக்கும் நிகழ்வுகளை க்யூட் வீடியோக்களாக பதிவு செய்ய நினைக்கிறார்.. அதற்காக மனைவியின் மொபைலில் ஹிடன் பேஸ் என்ற ஆப்-ஐ டவுன்லோட் செய்துவைத்து, மனைவிக்குத் தெரியாமலே அவரது போன் கேமராவை ஆன் செய்து அவரது அன்றாட செய்கைகளை கவனிக்கிறார்.
அப்படி கவனிக்கும் போது வீட்டுக்கு வேறோர் ஆண் வருவது அவருக்குத் தெரியவர ஷாக் ஆகிறார். அடுத்தடுத்து அவர் என்னென்ன அதிர்ச்சிகளை சந்திக்கிறார், எப்படி அவற்றை எதிர்கொள்கிறார் என்பது மீதிக்கதை..
நாயகனாக நடித்திருக்கும் எஸ்.பி.சித்தார்த் புதுமுகம். நடிகர் அருண்பாண்டியனின் சகோதரிமகன் என்கிற அடையாள அட்டையுடன் வந்திருக்கிறார்.அன்பான காதலர், அழகான கணவர், எல்லா நம்பிக்கைகளும் குலைந்து அதிர்ந்து நிற்கும் மனிதர் ஆகிய பல பரிமாணங்கள் கொண்ட கதாபாத்திரம். அதை நிறைவாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நடிக்க கூடிய நாயகன் கிடைத்து இருக்கிறார்.
ஹீரோயின் சைதன்யா ப்ரதாப் நல்ல தேர்வு. மென்மை, வன்மை என இரண்டு விதமான முகங்களை காட்டி நன்றாக நடித்துள்ளார். கணவனுக்கு தெரியக் கூடாததெல்லாம் தெரிகிறபோது பயமும் பதட்டமும் காட்டுவதாகட்டும் நடிப்பில் நல்ல தேர்ச்சி.
படத்தின் இறுதியில் வரும் அருண்பாண்டியனின் வேடமும், அவரது அதிரடி நடவடிக்கைகளும், நாயகனின் நிலையைக்கண்டு வருத்தமடையும் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைக்கிறது.
சித்தார்த்தின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் நாக், அப்பாவாக நடித்திருக்கும் மேத்யூ வர்கீஸ், ஜே.எஸ்.கவி, பிபின் குமார், சரித்திரன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் கதைக்கு ஏற்றபடியான நடிப்பினைக் கொடுத்துள்ளனர்
அருண்விஜயகுமாரின் ஒளிப்பதிவில் இயற்கை அழகுகள் மட்டுமின்றி கதாபாத்திரங்களின் அகவுணர்வுகளும் காட்சிகளில் வெளிப்படுகின்றன. மணிகண்டன்முரளியின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. சரண்ராகவனின் பின்னணி இசையும் நேர்த்தி.
சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் ஜானருக்கு மிக மிகப் பொருத்தமான கதைக்கருவை உருவாக்கி, தனித்தன்மை வாய்ந்த அழுத்தமான கதாபாத்திரங்களை வடிவமைத்து, யூகிக்கவே முடியாத திருப்பங்கள் நிறைந்த பிளாட் டிரைவன் ஸ்கிரிப்ட்டை சுவாரஸ்யமாகப் படைத்து, விறுவிறுப்பாக, அதே நேரத்தில் ஸ்டைலிஷாக படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுனில் தேவ்