வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அணுகும் சித்தார்த் (ஜையீத்), செல்வந்தரின் மகன். பெற்றோரை இழந்த தனி (சோனால்) எதையும் எளிதில் நம்பிவிடும் மனம் கொண்டவள். சவாலில் ஜெயிப்பதற்காக சித்தார்த் செய்யும் தவறு, ஊரை விட்டு செல்லும் அளவுக்குத் தனியைப்பாதிக்கிறது.
தவறை உணரும் சித்தார்த், அதற்குப் பிராயச்சித்தம் செய்ய தனியைத் தேடி, பனாரஸ் செல்கிறான். அவளைச் சந்தித்தானா? அவள், அவனை மன்னித்தாளா? அங்கே சித்தார்த் உணர்ந்துகொண்டது என்ன என்பது கதை.
நாயகன் ஜையீத்கான், புதுநடிகர் போல் இல்லாமல் எல்லாக் காட்சிகளிலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல. காலமாற்றம் காரணமாகக் குழம்பி நிற்கும் நேரங்களிலும் தேர்ச்சி பெறுகிறார்.
நாயகி சோனல் மாண்ட்ரியோ சிறப்பாக நடித்திருக்கிறார்.
அச்யுத்குமார், சப்னாராஜ்,தேவராஜ் உள்ளிட்ட நடிகர்களும் தங்கள் பங்கைச் சரியாகச் செய்திருக்கின்றனர்.
அத்வைத குருமூர்த்தியின் ஒளிப்பதிவில் காசி நகரின் சந்துபொந்துகளெல்லாம் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. கங்கை மற்றும் கங்கைக்கரைக் காட்சிகள் சிறப்பு.
அஜனீஷ்லோக்நாத் இசையில் பழனிபாரதியின் வரிகளில் பாடல்கள் கேட்கக் கேட்க இதமாக இருக்கின்றன.
காலப் பயணம் என சுவாரசியமாகத் தொடங்கி, கால வளையம் என 2-ம் பாதியின் திரைக்கதையில் வலுவான காரணங்களை அமைக்காததால் பாதி அவியலாகிவிட்டது, இந்த ‘பனாரஸ்’.
காசி நகரையும் கங்கை அழகையும் கண்டுகளிக்க வைக்கும் காட்சிகளுக்காகவே பார்க்கலாம்.