புளூ ஸ்டார் ; விமர்சனம்


அரக்கோணம் அருகே ஒரு கிராமத்தில் இரு பிரிவாக இருக்கிறார்கள். இங்கு இரு கிரிக்கெட் டீம் இருக்கிறது. ப்ளூ ஸ்டார் என்ற டீமிற்கு அசோக் செல்வன் கேப்டனாக இருக்கிறார். ஆல்பா என்ற டீமிற்கு ஷாந்தணு கேப்டனாக இருக்கிறார். இந்த இரு அணிகளும் எப்போதுமே எதிரும் புதிருமாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையே போட்டியே நடக்காது. காரணம் பிரச்சனை வந்துவிடும் என்பதற்காக.

இந்நிலையில், திருவிழாவை காரணம் காட்டி இரு டீமும் கிரிக்கெட் விளையாட திட்டமிடுகிறது. கிரிக்கெட் பிரச்சனை ஒரு கட்டத்திற்கு மேல் பொதுப் பிரச்சனையாக மாற எதிரிகளாக இருக்கும் இருவரும் ஒரே கருத்துக்காக ஒன்றிணைந்து போராடும் போது என்ன என்ன பிரச்சனைகள் உருவாகிறது, அதை எவ்வாறு சமாளிக்கின்றார்கள் என்பது தான் இந்த ப்ளூ ஸ்டார் படத்தின் கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன், கல்லூரி மாணவராக, அனல் தெறிக்கும் முகத்தோடு, விளையாட்டில் ஆக்ரோஷமாகவும், காதலில் உருகும் பனியாகவும் நடித்து ரசிக்க வைக்கிறார்.

நிஜத்தில் மனைவியாகிவிட்ட கீர்த்திபாண்டியன் இப்படத்தில் அசோக்செல்வனின் காதலி.பாடல்களுக்கு மட்டும் பயன்படும் நாயகியாக இல்லாமல் முக்கியமான பாத்திரம் அவருக்கு. அதில் பொறுப்பாக நடித்திருக்கிறார்.

மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் சாந்தனு, அசோக் செல்வனுக்கு இணையான வேடத்தில் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் சாந்தனு பல இடங்களில் எந்தவித ஆர்பாட்டமும் இன்றி தனது மனமாற்றத்தை கண்கள் மூலமாகவே வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. அசோக் செல்வனின் தம்பியாக நடித்திருக்கும் பிருத்விராஜ், துடுக்கான இளைஞராக காமெடியும், காதலும் கலந்த நடிப்பில் குலுங்க குலுங்க சிரிக்க வைத்து கைதட்டல் பெறுகிறார்.

ஒளிப்பதிவாளர் தமிழ்.ஏ.அழகன், கதாபாத்திரங்கள் மட்டுமின்றி கதைக்களமும் முக்கியம் என்பதை உணர்ந்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருப்பதுடன் பின்னணி இசையும் கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது. 1990-களில் நடக்கும் கதை என்பதால் மிக கவனமாக கலை இயக்கத்தை கையாண்டிருக்கும் கலை இயக்குநர் ஜெயரகு.எல்,

படத்தின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை இயல்பான காட்சிகளே தான் இருக்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே, இரு அணிகளுக்கிடையேயான போட்டி கிண்டல் செய்யப்பட்டு, முழு படமும் அந்த ஒரு போட்டியைப் பற்றியதாக இருக்கும் என்று நம்மை நினைக்க வைக்கிறது. ஆனால், காதல், குடும்பம் என இரண்டும் சரிசமாக இணைந்து நிதானமாக நகர்கிறது. நகைச்சுவையும் படத்திற்கு பக்கபலத்தை கொடுத்திருக்கிறது. கிராமப் பகுதிகளின் சாதி பாகுபாடு பற்றி பேசினாலும், கிரிக்கெட் விளையாட்டில் உள்ள அரசியலையும், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு அரசியலையும் நாசுக்காக விமர்சித்து கைதட்டல் பெறுகிறார் இயக்குநர் எஸ்.ஜெயக்குமார்