சிங்கப்பூர் சலூன் ; விமர்சனம்


ஆர்ஜே பாலாஜிக்கு தன்னுடைய சொந்த ஊரில் முடி திருத்தம் செய்யும் சாச்சாவை பார்த்து பார்த்து முடி திருத்தும் வேலையின் மீது ஆசை ஏற்படுகிறது. இதனால் அவரிடம் முடி திருத்தும் வேலையை கற்றுக் கொள்கிறார். பிறகு ஆர்.ஜே பாலாஜி தன்னுடைய படிப்பை முடித்தவுடன் சிங்கப்பூர் சலூன் என்று தன்னுடைய சொந்த ஊரிலேயே சலூன் ஒன்றை துவங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

கஷ்டப்பட்டு சில கோடிகளை முதலீடாக வைத்து மிக பிரமாண்டமான சலூன் ஒன்றையும் திறக்கிறார் ஆர் ஜே பாலாஜி.. தொழில் போட்டியாளர்கள் ஒரு பக்கம் இயற்கை அழிவு ஒரு பக்கம் என ஆர் ஜே பாலாஜியை துரத்த இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்தாலும் நகைச்சுவை செய்தால்தான் ஏற்பார்கள் என்கிற வழக்கத்தை உடைக்க முயன்றிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. குறிப்பாக, எமோஷனல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். கல்லூரி மாணவர், சிகை அலங்கார நிபுணர் ஆகியனவற்றிற்காக தோற்றத்திலும் நடிப்பிலும் வேறுபாடு காட்டியிருக்கிறார்.

நாயகி மீனாட்சி செளத்ரி, சில காட்சிகளில் மட்டுமே வந்துசென்றாலும் வெகுமக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிற வேடத்தில் நடித்திருக்கிறார்.

படத்தில் முற்பாதியின் பலமாக சத்யராஜ் இருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் சிரிப்பு மழை.தன் வழக்கமான பாவனைகள் எதையும் வெளிப்படுத்தாமல் முற்றிலும் மாறுபட்ட நடிப்பைக் கொடுத்து இரசிகர்களை ஈர்த்திருக்கிறார்

ஆர்.ஜே.பாலாஜியின் தந்தையாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், கிராமத்தில் முடிவெட்டுபவராக நடித்திருக்கும் லால் ஆகியோரின் அனுபவ நடிப்பு அந்தந்த வேடங்களுக்குப் பலம். நாயகனின் நண்பராக வரும் கிஷன்தாஸ், ஜான்விஜய், ரோபோசங்கர் ஆகியோர் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் மற்றும் ஜாவேத் ரியாசின் பின்னணி இசை பலமாக நிற்கிறது. குலத்தொழில் கருத்துக்கு எதிராகக் கத்தியைத் தூக்கியிருக்கும் இயக்குநர் கோகுல்,அதைப் பொழுதுபோக்கு அம்சங்களோடு கலந்து கொடுத்து அனைவரையும் இரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக புத்திமதி சொல்கிறேன் என்று இல்லாமல், பார்வையாளர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதோடு, இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் விதத்திலும் படத்தை கையாண்டிருக்கும் இயக்குநர் கோகுல், தான் சொல்ல வந்ததை மிக எளிதாக மட்டும் இன்றி வலிமையாகவும் ரசிகர்களிடம் கடத்தியிருக்கிறார்.