வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் சமீப நாட்களாக அதிகமாக வெளி வருகின்றன. அந்தவகையில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்திலும் அதே வரவேற்பை பெற்றதா ? பார்க்கலாம்.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு சிலர் மாடியிலிருந்து கீழே விழுந்து இறக்கின்றனர். அதே கட்டிடத்தில் ப்ரியா பவானி சங்கரின் காதல் கணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்கிறார். தனது கணவரின் ஆவி தன்னுடன் பேச நினைப்பதாக அறிகிறார் ப்ரியா பவானி சங்கர். அதற்காக சாமியார் ஒருவரின் உதவியுடன் தனது கணவரின் ஆவியுடன் பேச முற்படுகிறார்.
ஆனால், அங்கு வேறொரு ஆவி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை அறிந்து, அந்த ஆவிக்காக உதவி செய்ய நினைக்கிறார். அதுதான், முதல் பாகத்தில் இறந்து போன் அருள்நிதியின் ஆவி. ஒருகட்டத்தில் அருள்நிதியின் ஆவியை மீட்டு, அவரை காப்பாற்றி விடுகிறார் ப்ரியா. ஆனால், கோமாவிற்கு சென்று விடுகிறார் அருள்நிதி.அதன்பின் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.
முதல் பாகத்தில் அருள்நிதியின் கேரக்டர் இறப்பது போல் முடிக்கப்பட்டு இருக்கும். அதை அப்படியே தொடர்ச்சியாக கொண்டு வந்து அவர் இறக்கவில்லை என ட்விஸ்ட் வைத்து படத்தை தொடங்கியுள்ளனர். அப்படி என்றால் அவர் எப்படி தப்பித்தார்? அந்த செயின் என்ன ஆனது? அதன் பின்புலம் என்ன? என்பதை தான் இரண்டாம் பாகத்தில் சுவாரசியத்துடன் திகில் கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர்.
கதை தேர்ந்தெடுத்து நடிப்பதில் எப்போதும் கவனமாக இருப்பவர் நடிகர் அருள்நிதி. இப்படத்திலும், அதை சிறப்பாகாவே செய்திருக்கிறார். பிரியா பவானி சங்கரின் ஆலோசனைப்படி தப்பிக்க நினைப்பதும், பின்னர் மாட்டிக் கொண்டு பயத்தில் உயிருக்கு போராடும் இடங்களில் எதார்த்தத்தை மீறாமல் அலட்டாத தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார்.
நடிகை பிரியா பவானி சங்கர் தானும் ஒரு திறமையான நடிகை என்பதை இதில் நிரூபித்திருக்கிறார். சொல்லப்போனால், அருள்நிதியை தாண்டிலும் அதிகமான காட்சி ப்ரியா பவானி சங்கருக்கு தான்.
ஒளிப்பதிவாளர்- ஹரிஷ் கண்ணன் காட்சிக் கோணங்கள் படத்திற்கேற்ற திகிலை அதிகரிக்க என்ன செய்ய முடியுமோ அத்தனையும் காட்ட முயற்சி செய்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசை ஆரம்பம் முதல் இறுதி வரை மிரட்டலுடன் கொடுத்துள்ளார்.
இயக்குநர் அஜய்ஞானமுத்து.ஆவியிடம் பேசுதல்,சீனத் துறவி, போர்த்துகீசிய நபர்,புத்தர் பூசை என நிறைய புதுவிசயங்களை வைத்து படத்தின் சுவாரசியத்தைக் கூட்ட முயன்றிருக்கிறார். இரண்டாம் பாதியை விட முதல் பாதியில் ரசனைக்குரிய விடயங்கள் அதிகம். அதிலும் குறிப்பாக படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் முதல்பாகத்தின் பாத்திரங்கள் இரண்டாம் பாகத்தோடு இணையும் வரையிலான காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கிறது.