இந்த வருடம் பதான், ஜவான் என ஆயிரம் கோடி வசூலித்த சூப்பர்ஹிட்டுகளை கொடுத்த ஷாருக்கானக்கு இந்த டங்கி மீண்டும் ஆயிரம் கொடியை பரிசளிகுமா ? ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா ? பார்க்கலாம்.
கதை இதுதான்.. வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்ளும் விதமாக டாப்ஸியும் அவரது நண்பர்களும் இங்கிலாந்து செல்ல முயற்சி செய்கின்றனர். தகுதி இல்லாத காரணத்தினால், அவர்களுக்கு விசா மறுக்கப்படுகிறது. இதனால் சட்ட விரோதமாக இங்கிலாந்திற்குள் செல்ல, முன்னாள் ராணுவ வீரரான ஷாருக்கானின் உதவியை நாடுகின்றனர். அவர் உதவினாரா, அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் என்ன? எனபதே மீதிக்கதை.
இளமை மற்றும் வயதானவர் ஆகிய இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கிறார் ஷாருக்கான்.நகைச்சுவை, காதல், கோபம், சோகம் ஆகிய எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரம். எதிலும் அவர் குறை வைக்கவில்லை. பதான்’ மற்றும் ‘ஜவான்’ திரைப்படங்கள் என்னுடைய ரசிகர்களுக்காக நான் நடித்த படம். ஆனால் இந்த ‘டங்கி’ எனக்காக நானே விரும்பி நடித்த படம்” என்று ஷாருக்கான் பல பேட்டிகளில் கூறியிருந்தார். எதற்காக இப்படி சொன்னார் என்பது படம் பார்த்த பின்புதான் புரிகிறது.
நாயகியாக நடித்திருக்கிறார் டாப்சி. கதையின் தொடக்கமும் முடிவும் இவரே. தன் லட்சியத்திற்காக இங்கிலாந்தில் பொய் பேசி குடியுரிமை பெரும் குற்ற உணர்ச்சியிலும் டாப்ஸி நடிப்பு டாப் கிளாஸ். ஷாருக்கானுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். பொம்மன் இரானி, விக்ரம் கோச்சார், அனில்குரோவர் மற்றும் ஸ்பெஷல் என்ட்ரி விக்கிகவுசல் ஆகியோர் நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
ப்ரீதமின் இசை மற்றும் பின்னணி இசை, சி.கே.முரளீதரன், மனுஷ் நந்தன் மற்றும் அமித் ராய் ஆகியோரால் திறமையாகக் கையாலப்பட்ட ஒளிப்பதிவு, ராஜ்குமார் ஹிரானியின் எடிட்டிங் உட்பட அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களில் பங்களிப்பு உணர்ச்சி நிறைந்த சினிமா அனுபவத்தை வழங்குகிறது.
இந்திய சினிமாவில் அதிகமாக பேசப்படாத, சொல்லப்படாத கதை. ஆனால் படத்துக்குப் படம் மாறுபட்ட கதைக்களங்களைக் கையிலெடுக்கும் இந்தி இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, இப்போது சட்டவிரோதமாக நாடு விட்டு நாடு செல்லும் மக்களின் வலிகளைச் சொல்லியிருக்கிறார். அதேசமயம் பஞ்சாப் மாநிலத்திலிருந்து இலண்டனுக்கு டங்கி என்று சொல்லப்படும் சட்டவிரோதமான பாதையில் பயணம், அதற்கான காரணம், அதன் விளைவுகள் ஆகியனவற்றை நகைச்சுவை இழையோடச் சொல்லியிருக்கிறார்.
இருந்தாலும் தேசப்பற்று கொண்ட ஒரு ராணுவ வீரர் திருட்டு வழியில் இங்கிலாந்துக்கு இவர்களை கூட்டிப் போவதையும், மீண்டும் அதே திருட்டு வழியில் இந்தியா கொண்டு வருவதையும் ஏற்பதற்கு மனம் ஒப்பவில்லை. அதேசமயம் அத்துமீறி எல்லை கடக்கும் மனிதர்கள் என்ன ஆனார்கள் என்று நிஜத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டி இறுதியில் ஒரு எச்சரிக்கையையும் கொடுத்து விடுகிறார் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி.