ஆயிரம் பொற்காசுகள் ; விமர்சனம்


இந்த காலத்தில் ஒரு சாதாரண மனிதனுக்கு நிலத்தை தோண்டும்போது புதையல் கிடைத்தால் அதை தனக்கு சொந்தம் என அவனால் அனுபவித்து விட முடியுமா ? ஆயிரம் பொற்காசுகள் படம் இதை காமெடி பாணியில் சொல்லியிருக்கிறது.

தஞ்சாவூர் பகுதி கிராமத்தில் எந்த வேலைக்கும் செல்லாத சோம்பேறி மனிதர் சரவணன். இந்நிலையில் சரவணின் தங்கை தன் மகன் விதார்த் அவரை தேடி வருகிறார்.. மத்திய அரசின் கழிப்பறை கட்டும் திட்டத்தில் அந்த கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டி புகைப்படும் எடுத்து ஊர் தலைவருக்கு அனுப்பினால் பன்னிரண்டாயிரம் பணம் தருவதை கேள்விப்பட்டு எதிர் வீட்டில் வசிக்கும் ஹலோ கந்தசாமி கட்டிய கழிப்பறையை புகைப்படம் எடுத்து ஊர் தலைவரிடம் பணம் பெற்று ஜாலியாக மாமனும் மச்சானும் செலவழிக்கின்றனர்.

ஹலோ கந்தசாமி தான் கட்டிய கழிப்பறைக்கு பணம் வாங்க செல்லும் போது தான் இருவரின் ஏமாற்று வேலை தெரிய வர, ஊர் தலைவரிடம் முறையிட, அவரின் உத்தரவுப்படி சரவணனும், விதார்த்தும் தங்கள் வீட்டில் கழிப்பறை கட்டி பணம் பெற்று ஹலோ கந்தசாமியிடம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கின்றனர்.

இருவரும் சேர்ந்து குழி தோண்டுவது சிரமமாக இருக்க, ஜார்ஜ் மரியானிடம் இந்த வேலையை ஒப்படைக்கின்றனர். ஜார்ஜ் மரியான் குழி தோண்டும் போது சோழர் காலத்து ஆயிரம் பொற்காசுகள் புதையல் கிடைக்கிறது. இதனை ஊருக்கு தெரியாமல் சரவணன், விதார்த் மற்றும் ஜார்ஜ் ஆகியோர் மூன்று பங்காக பிரித்து எடுத்து கொள்ளலாம் என்று முடிவு செய்கின்றனர்.

இந்த பங்கு பிரிப்பு நடப்பதற்குள் சரவணனுக்கும் ஜார்ஜ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையில் முடிய அடிபடும் ஜார்ஜ்ற்கு சுயநினைவு இழந்து ஞாபக மறதியால் அவதிப்படுகிறார். இதனால் மகிழ்ச்சியாகும் மாமனும் மச்சானும் அந்த ஆயிரம் பொற்காசுகளை தங்களுக்குள் பங்கு போட நினைக்க ஒரு கட்டத்தில் புதையல் பற்றிய செய்தி ஒருவர் மூலம் மற்றவருக்கு பரவி ஒரு கட்டத்தில் ஊர் முழுக்க பரவி ஊரே பங்கு கேட்கிறது.

இறுதியில் தொல்லியல் துறையின் வருகையால் என்ன ஆனது? புதையலை அடைய முற்படும் கிராம மக்கள் அனைவருக்குள்ளும் நடக்கும் சண்டையும், துரத்தலும் முடிவுக்கு வந்ததா? யாரிடம் இறுதியில் ஆயிரம் பொற்காசுகள் கிடைத்தது? கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.

ஒரு கிராமம், அங்கு வசிக்கும் பல்வேறு விதமான மனிதர்கள்,அவர்களுடைய தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியனவற்றை அப்படியே வெளிப்படுத்த அதையும் சிரிப்புடன் கலந்து சொல்ல வாய்ப்பான கதை. அதை எதார்த்தமும் எள்ளலுமாகச் சொல்லியிருக்கும் படம் ஆயிரம்பொற்காசுகள்.

ஊருக்கு ஒருத்தராவது இப்படி இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழும் கதாபாத்திரம் பருத்திவீரன் சரவணனுக்கு.சும்மாயிருப்பதே சுகம் எனும் நினைக்கும் அவருடைய உடல்மொழியும் நடிப்பும் படத்தைத் தூக்கிப்பிடித்திருக்கிறது.அடுத்தவர் வீட்டுக்குக் கிடைக்கும் தொகையைத் தன் கணக்கில் சேர்க்கும் தந்திரம்,அதை அநாயசயமாக எதிர்கொள்ளும் இலாவகம் ஆகியன அவருடைய தனிச்சிறப்பு.

மாமன் சரவணனுக்கு ஏற்ற மருமகனாக வருகிறார் விதார்த்.ஜாடிக்கேற்ற மூடி போல் சரவணனுக்கு ஈடுகொடுத்திருக்கிறார்.காதல் மற்றும் கடைசிக்காட்சிகள் அவருக்கென அமைந்திருக்கின்றன

காதலி பூங்கோதையாக அருந்ததி நாயர் விதார்த்தை கடையில் ரகசியமாக சந்தித்து பழகுவதும், காதலனை நம்பி லெட்டர் எழுதி விட்டு இரவில் கோழி கூடைக்குள் ஒளிந்து கொள்வதும், காதலன் வராததால் மீண்டும் எதுவும் தெரியாதமாதிரி போய் வீட்டில் படுத்து கொள்வது என்று சில காட்சிகள் என்றாலும் மனதில் நிற்கிறார்

எதிர் வீட்டு மீன் வியாபாரி கோவிந்தனாக ஹலோ கந்தசாமி வலுவான கதாபாத்திரம் இயல்பாக தடையின்றி பேச்சும், பண்ணும் அளப்பறை தான் படத்தின் ஹைலைட்ஸ். இவர் மூலம் தான் கதை விரிவடைந்து, இறுதி வரை போனை வைத்துக் கொண்டு அனைவரையும் விரட்டும் விதமும், சரவணன், விதார்த்தை பின் தொடர்ந்து சென்று வேவு பார்ப்பது, ஊரையே பங்குக்காக வந்து நிற்கும் வரையில் காமெடியிலும் நடிப்பிலும் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் பானு முருகன் கிராமத்தையும், மக்களையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஜோகன் சிவனேஸின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு பயணித்து பலம் சேர்த்திருக்கிறது

அந்தவகையில் பேராசை பெருநஷ்டம் என்பதை அழகாக சொல்லியிருப்பதும், அதன் பின் நடக்கும் சம்பவங்கள் கடைசி இருபது நிமிடங்கள் யாருக்கு புதையல் கலசம் கிடைக்கிறது என்ற கலகலப்பை தக்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. படம் ஆரம்பித்து சில காட்சிகள் தவிர்த்து, இறுதிவரை நகைச்சுவையை மட்டுமே நம்பி, அதில் ஜெயித்தும் இருக்கிறார், அறிமுக இயக்குனர் ரவி முருகையா.