கிரிக்கெட்டை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் பல படங்கள் வந்திருந்தாலும் கால்பந்தை மையப்படுத்தி வெளியான படங்கள் மிகவும் குறைவு. அந்தக்குறையை போக்கும் விதமாக வெளியாகியுள்ள படம் தான் ‘எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு’, அதேசமயம் ரசிகர்களை திருப்திப்படுத்தி உள்ளதா..? பார்க்கலாம்.
பொதுவாகவே கால்பந்து விளையாட்டில் வர்க்கபேதம் நிச்சயம் தலை தூக்கும். இதிலும் அப்படித்தான். பட்டியலினத்தை சேர்ந்த சில வாலிபர்கள் கால்பந்தாட்ட பயிற்சி எடுத்து சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து ஒரு கால்பந்தாட்ட குழுவை உருவாக்குகிறார் வாத்தியார் ஆன மதன் தட்சிணாமூர்த்தி. தன் மாணவர்களை மாநில அளவில் கால் பந்தாட்டத்தில் விளையாட விளையாட்டு அகாடமியில் வாய்ப்பு கேட்கிறார்.
இவர்கள் திறமையை பார்த்து வாய்ப்புத் தரும் அகாடமி தலைவரை அந்த ஊர் மேல் ஜாதியை சேர்ந்த ரவுடி மிரட்டி அவர்களை கால்பந்தாட்டம் விளையாட முடியாமல் தடுக்கிறார், இதனால் கோபம் கொண்ட வாலிபர் கூட்டம் ரவுடியின் தம்பியை கொலை செய்கிறார்கள். அதற்கு பழிவாங்க ரவுடி கும்பல் களமிறங்க பட்டியல் இன வாலிபர்களுக்கும் மேல் சாதி ரவுடிக்கும் நடக்கும் பழிவாங்கும் போராட்டமாக மாறுகிறது. இதைத்தாண்டி இந்த இளைஞர்களால் சாதிக்க முடிந்ததா என்பது மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்துள்ள சரத் படத்தின் தனி ஒருவனாக தெரியாமல் கூட்டத்தில் ஒருவனாக மட்டுமே தெரிகிறார். காதலி ஐராவிடமும் ஷட்டிலான பர்பாமன்ஸை காட்ட.. அவர் ‘தாக்கு தாக்கு தாக்குறா…’ என்ற பாடலை பாடி.. துள்ளல் ஆட்டமும் ஆடி.. சிரிக்கவைக்கிறார். வாத்தியாராக நடித்திருக்கும் அருவி மதன் இளம் வீரர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் தன் அனுபவத்தை பேசி அவர்களை உத்வேகப்படுத்துவதில் மனதை கவர்கிறார். பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை ஆறுதல் படுத்துகிறது
ஆண்டாண்டு காலமாக தமிழ் சினிமாவில் அடிக்கடி வரும் ஜாதி பிரச்சனையை தான் இந்த படத்தில் கதையை இயக்குனர் செ.ஹரி உத்ரா,எடுத்துக்கொண்டு திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார். ஆனால் அவர் சொல்ல வரும் கருத்துக்குள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து படத்தை நகத்தினாலும் படம் முழுவதும் மேல் ஜாதியினர் கெட்டவர்கள் போல் பட்டியல் இனத்தவர் அவர்களால் இன்னும் அடிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதையே வலியுறுத்துகிறார், அதை தவிர்த்திருக்கலாம்.
மேலும் இளைஞர்களை பக்கம் பக்கமாக வசனங்களைப் ஆக்ரோஷமாக பேச வைத்து ரவுடிகளையும் ஆக்ரோஷமாக பேச வைத்து அழகான விளையாட்டு படத்தை வேறு விதமாக இயக்குனரே மாற்றிவிட்டார்.
அதனால் இந்த வாத்தியார் கால்பந்தாட்ட குழு சரியாக கொள் போட முடியாமல் படம் முழுதும் தவிக்கிறது.