செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுத்தரும் நிறுவனத்தை பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னைப் பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது
குடும்பத்தின் வறுமைச் சூழலால் பணத்துக்கு ஆசைப்பட்டு, செய்யாத கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொண்டு சிறைக்குச் செல்கிறார் பீட்டர். ஆறு மாதத்தில் அவரை சிறையிலிருந்து மீட்டுவிடுவோம் என உறுதியளித்த தரப்பு, பின்னர் அவரை மீட்க முடியாது என கை கழுவிவிட, எதிர்பார்த்த பணம் கிடைக்காமல் ஏமாற்றத்தை சந்திக்கிறது அவரது குடும்பம். பீட்டரின் மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்.
இந்த விவகாரம், செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களை நிரபராதிகள் என நிரூபிப்பதை முழுநேரப் பணியாக செய்கிற டிடெக்டிவ் வினோத் கவனத்துக்கு வருகிறது. அவர், நடந்தது என்ன? வழக்கில் பீட்டர் சிக்கியது எப்படி? உண்மையில் கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்றெல்லாம் ஆராயும் முயற்சியில் இறங்குகிறார். கிடைக்கிற தகவல்கள், நடந்திருக்கும் சம்பவங்கள் என அனைத்தும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தருவதாக இருக்க, பீட்டரை வினோத்தால் சிறையிலிருந்து விடுவிக்க முடிந்ததா இல்லையா? என்பதே கதையோட்டம்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சார்லி, படத்தின் அடையாளமாக இருப்பதோடு, தனது நடிப்பின் மூலம் பலமாகவும் பயணித்திருக்கிறார். குடும்ப கஷ்ட்டத்திற்காக செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் அவர் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்து கலங்கும் இடங்கள் அட்ரா சக்க ரகம். ஆனால், சோகமான காட்சிகள் என்றாலே அழுவதையே நடிப்பாக வெளிப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம். செண்ட்ராயனுக்கு முக்கியமான வேடம் என்றாலும், அவருக்கான வாய்ப்பு என்னவோ குறைவு தான். ஆனால், அதில் நிறைவாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் தாரணி நாயகனுடன் பயணித்தாலும், திரக்கதையோடு பயணிக்காமல் தனித்து நிற்கிறார். நிழல்கள் ரவி சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், தனது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறார். வழக்கறிஞர் சரண்ராஜ், பீமா, குரு, காவல்துறை அதிகாரி, ருத்ரசுவாமி, வேளச்சேரி கவுன்சிலர், கவுன்சிலரின் மனைவி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் புதியவர்கள் என்றாலும், அவர்களின் நடிப்பில் அது தெரியவில்லை.
பிரசாந்த் வெள்ளிங்கிரியின் ஒளிப்பதிவு குப்பத்தையும், கோர்ட்டையும் இயல்பாகக் காட்டி இருக்கிறது. சூரிய பிரசாத் இசையும் படத்தின் தரத்துக்கு ஏற்ப ஒலித்திருக்கிறது. இப்படியெல்லாம் நடக்குமா? என ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் இப்படத்தின் திரைக்கதை, இருக்கை நுனியில் ரசிகர்களை இருத்தி வைக்கிறது. படம் முழுதுமே எதிர்பாராத திருப்பங்கள் கொண்டதாக.. அடுத்து என்ன.. என்று கேட்கும்படியாக உள்ளது. சிறப்பான இயக்கம்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் வினோத் ராஜேந்திரன் தான் கதை எழுதி இயக்கியிருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருப்பவர் இயக்குநராக மட்டும் இன்றி தனது இயல்பான நடிப்பு மூலம் நாயகனாகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்