இந்தியன்-2 ; விமர்சனம்


முதல் பாகத்தில் தமிழ்நாட்டு ஊழல்வாதிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய இந்தியன் தாத்தா, இந்த முறை இந்தியா முழுவதும் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராக தனது போராட்டத்தை தொடங்குகிறார்.

சித்தார்த் மற்றும் நண்பர்கள் ஒரு யூட்யூப் சேனல் வைத்து சமுதாயத்தின் அவலங்களை மக்கள் முன் பிரதிபலிக்கின்றார்கள். ஆனாலும் அவர்கள் வெளியிடும் வீடியோவில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை காரணம் லஞ்சம் குற்றவாளிகள் லஞ்சத்தை மூலதனமாக வைத்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கின்றனர்.

இவர்களை யார் தட்டி கேட்பது என்று சித்தார்த் தன் நண்பர்களுடன் விவாதிக்கும் போது இந்தியன் தாத்தா மீண்டும் இந்தியா வந்தால்தான் இந்த லஞ்சத்தை ஒழிக்க முடியும் நாட்டை சீர்படுத்த முடியும் என்று முடிவெடுத்து சோசியல் மீடியா மூலம் இந்தியன் தாத்தாவை வரவழைக்கின்றனர்.

அதே சமயம், அவர் இந்தியாவுக்கு திரும்ப வர வேண்டும் என்று விரும்பிய சித்தார்த்தே அவரை வெறுக்கிறார். மறுபக்கம் அவரை தேடிக்கொண்டிருக்கும் விசாரணை அதிகாரிகளும் அவரை நெருங்குகிறார்கள். அதிகாரிகளிடம் இருந்து இந்தியன் தாத்தா தப்பித்தாரா?, சித்தார்த் அவரை வெறுப்பது ஏன்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

இந்தியன் தாத்தா என்கிற வேடத்தின் தன்மையை தன் தேர்ந்த நடிப்பின் மூலம் பன்மடங்கு அதிகப்படுத்திக் காட்டியிருக்கிறார் கமல்.இந்த பாகத்தில் பலவித தோற்றங்களில் வருகிறார்.அவை திரைக்கதைக்குப் பலம் அவருடைய இரசிகர்களுக்கு விருந்து.

சித்தார்த்,பிரியா பவானி சங்கர், ரகுல்பிரீத்சிங், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா,பாபி சிம்ஹா,ஜெகன்,ரிஷி என ஏராளமானோர் படத்தில் இருக்கிறார்கள். மறைந்த நடிகர்கள் விவேக்,நெடுமுடிவேணு,மனோபாலா உள்ளிட்டோரைய் பார்க்கும்போது கலக்கம்.எல்லோரும் அவரவர் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்

இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் “தாத்தா வராரே…” பாடல் திரையரங்கையே அதிர வைக்கிறது. மற்ற பாடல்களும் ஓகே ரகம் தான். ரவிவர்மனின் ஒளிப்பதிவு இயக்குநரின் பிரமாண்ட கற்பனைக்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு மூன்று மணி நேரம் படத்தை அலுப்பில்லாமல் பார்க்க வைக்கிறது.

நாட்டில் நடக்கும் பெரிய பெரிய ஊழல்களுக்கு எல்லாம் சிறிய அளவில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளே மூலக்காரணம் என்பதை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஷங்கர், இலவசங்கள் வழங்கும் தமிழக அரசியல் பற்றி மேலோட்டமாக பேசிவிட்டு, குஜராத் தொழிலதிபர்களை பற்றியும், அவர்களின் ஊழல் பின்னணி பற்றியும் விரிவாக பேசியிருப்பது அவரது ஒரு சார்பு தன்மையையோ அல்லது அவருக்கான நிர்ப்பந்தத்தையோ தான் காட்டுகிறது.