நரிக்குறவரான நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆரிடம் ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா நட்பாக பழகுகிறார். ஐஸ்வர்யா தத்தா மீது ஜுனியர் எம்.ஜி.ஆருக்கு காதல் மலர்கிறது. ஆனால் ஐஸ்வர்யா தத்தா துறவி ஆவதென முடிவு செய்து ஜெயின் மடத்தில் சேர்ந்துவிடுகிறார். ஐஸ்வர்யா தத்தா துறவி ஆவதை விரும்பாத ஜுனியர் எம்.ஜி.ஆர் அவரை துறவி மடத்தில் இருந்து கடத்த திட்டமிட, அதன் பிறகு என்ன நடந்தது என்பதையும், அவரது காதல் கைகூடியதா? இல்லையா? என்பதையும் கமர்ஷியலாக சொல்வது தான் ‘இரும்பன்’.
படத்தின் நாயகன் ஜூனியர் எம்ஜிஆர் கட்டுமஸ்தான உடலுடன் காட்சியளித்தாலும் இடைவேளைக்கு பின்பு தான் அவருக்கான வேலையே ஆரம்பிக்கிறது. அதுவரை படத்தை யோகிபாபு, சென்ராயன் இருவரும் தாங்கிப் பிடித்து கலகலப்பாக நகர்த்திச் செல்ல உதவி செய்திருக்கிறார்கள். ஜூனியர் எம்ஜிஆர் கிளைமாக்ஸ் நெருங்கும் சமயத்தில் ஆக்சன் காட்சிகளில் தன்னை யார் என நிரூபித்து இருக்கிறார்.
ஐஸ்வர்யா தத்தா அழகு பொம்மையாய் வந்து நடிக்கவும் செய்து கவர்ச்சியும் காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கிறார். நாயகன், நாயகி, வில்லன் என யாராக இருந்தாலும் சகட்டுமேனிக்கு கலாய்த்து காமெடி பண்ணுகிறார் யோகி பாபு. கிளைமாக்ஸுக்கு முன்னதாக அவர் முடிவு தான் பரிதாபப்பட வைக்கிறது.
இவர்களின் கூட்டத்தில் வரும் மற்ற நண்பர்களும் தங்களால் இயன்றதை செய்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் சம்பத் ராம், வில்லன் சேட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷாஜி சவுத்ரி இருவரும் கதையை விறுவிறுப்பாக நகர்த்த உதவி இருக்கிறார்கள்.
கடல் சம்பந்தப்பட்ட காட்சிகளை, புயலில் படகு சிக்கி தடுமாறும் காட்சிகளை, ஒளிப்பதிவாளர் லெனின் பாலாஜி அவ்வளவு தத்ரூபமாக படமாக்கி இருக்கிறார். அதற்காக அவரை ஸ்பெஷலாக பாராட்டலாம். படத்தின் இயக்குனர் கீரா காதலை மட்டுமே மையப்படுத்தி அதேசமயம் இதை ஒரு அட்வென்ச்சர் த்ரில்லர் போல கொடுப்பதற்கு முயற்சித்திருக்கிறார்.
சொல்லப்போனால் இடைவேளைக்குப் பின்னான படம் தான் ரசிகர்களை கவரும் விதமாக இருக்கிறது. ஜூனியர் எம்ஜிஆர் இன்னும் நடிப்பில் பல படிகள் செல்ல வேண்டும். இந்த குறும்பன் இடைவேளை வரை கொஞ்சம் எரிச்சல் ஊட்டினாலும் இடைவேளைக்கு பிறகு ரசிக்க வைக்கிறான்.
மெதுவாக நகரும் திரைக்கதை, என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் இஷ்ட்டத்திற்கு நடிகர்கள் பேக்கொண்டு இருப்பது போன்றவை மூலம் கொஞ்சம் கடுப்பேற்றினாலும், பாடல்கள், சண்டைக்காட்சிகள் மற்றும் நகைச்சுவை காட்சிகள் மூலம் ரசிக்கவும் வைக்கிறான் இந்த ‘இரும்பன்’.