ஜெ பேபி – விமர்சனம்


ஊர்வசிக்கு லொள்ளு சபா மாறன், அட்டக்கத்தி தினேஷ் உட்பட ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டு ஒவ்வொருவர் வீட்டிலும் தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார் ஊர்வசி. ஆனால் வயதான காரணத்தினால் மறதி ஏற்படுவது, சில சமயங்களில் குழந்தை தனமாக நடந்து கொள்வது என அவருடைய போக்கு கொஞ்சம் வில்லங்கத்தை ஏற்படுகிறது.

இதனால் எரிச்சலாகும் பிள்ளைகள் அவரை மனநல மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அங்கு அனைவரிடமும் பாசத்துடன் நடந்து கொள்ளும் ஊர்வசி ஒரு கட்டத்தில் யாருக்கும் தன் மேல் பாசம் இல்லை என அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார். கால் போன போக்கில் கொல்கத்தா பக்கம் செல்லும் அவர் பற்றி பிள்ளைகளுக்கு தகவல் கிடைக்கிறது.

குடும்பப் பிரச்சினையால் பேசிக்கொள்ளாமல் இருந்தாலும் தாயைத் தேடிச் செல்லும் மாறன், தினேஷ் இருவரும் அவரை கண்டுபிடித்தார்களா? ஊர்வசியின் நிலை என்ன? பிள்ளைகளுடன் அவர் சென்றாரா? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இப்படம்.

ஊர்வசி தான் இந்த படத்தின் மெயின் கேரக்டர் என்பதும் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட அவர் நடிப்பில் அசத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திறந்து இருக்கும் வீடுகளை வெளியே பூட்டி விட்டு வந்து விடுவது,அடுத்த வீட்டுக்கு வந்த கடிதங்களைத் தூக்கிக் கொண்டு வந்து விடுவது, வீட்டில் உள்ள மோதிரத்தைக் கொண்டு போய்ப் யாருக்காவது தானம் செய்வது என வழக்கத்துக்கு மாறான குணங்கள் கொண்ட வேடம், சும்மா பிரித்து மேய்ந்திருக்கிறார்.

ஊர்வசியின் மூத்த மகனாக நடித்திருக்கும் மாறன், சிறந்த குணச்சித்திர நடிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். தம்பி மீது ஏற்பட்ட பகையை அவர் வெளிப்படுத்தும் விதமாகட்டும், தனது வழக்கமான டைமிங் வசனங்கள் மூலம் அவ்வபோது சிரிப்பதாகட்டும் அனைத்தையும் அளவாக செய்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

ஊர்வசியின் இளைய மகனாக நடித்திருக்கும் தினேஷ், தொப்பை வயிறுடன் கதாபாத்திரத்திற்காக தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். குடும்பத்துடன் சேர முடியாமல் தவிப்பவர் தனது மனவலியை வெளிப்படுத்தும் காட்சியில் மாறனை மட்டும் அல்ல பார்வையாளர்களையும் யோசிக்க வைத்துவிடுகிறார்.

பேபியின் இளையமகள் செல்வியாக மெலடி டார்கஸ் தன் தாயிடம் கொண்ட அன்பையும், தன் தாய்க்கு ஏற்பட்ட பிரச்சனைகளை அழகாக டாக்டரிடம் விவரிப்பது, தாய் காப்பகத்தை விட்டு செல்லும் போது அழுதுகொண்டே பின்னாடி ஒடிப்போகும் அப்பாவி மகளாக மிகையில்லா நடிப்பு தத்ரூபம்.

சேகர் நாராயணன், தாட்சாயிணி, இஸ்மத் பானு, சபீதா ராய், மாயா ஸ்ரீ என்று ஏகப்பட்ட புதுமுகங்கள் தங்கள் நடிப்பால் தேர்ந்த அறிந்த முகங்களாக தெரிய வைத்துள்ளனர். ஒரு உண்மைக் கதையில் இருந்து உருவான இந்தப் படத்தில் உண்மையில் கல்கத்தாவில் உதவிய சேகர் நாராயணனே படத்தில் அவராகவே நடித்திருப்பது அற்புதம். அவர் சிறப்பாக நடித்துள்ளார் என்பது இன்னும் வியப்பு

ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிக நேர்த்தியாக ரசிர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. ஊர்வசியின் ஒவ்வொரு அசைவுகளையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். டோனி பிரிட்டோவின் இசை காட்சிகளை உயிரோட்டம் மிக்கதாக நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறது.

குடும்ப உறவுகளையும் அம்மாவின் அளவில்லாத பாசத்தையும் வெளிக்கொணரும் விதமாக ஒரு உண்மைச் சம்பவத்தை கண்முன்னே நிலைநிறுத்திய இயக்குனருக்கு தாரளமாக சபாஷ் போடலாம். சில சில குறைகள் இருந்தாலும் கிளைமாக்ஸில் பார்வையாளர்களை அழ வைப்பதில் இயக்குனர் வெற்றி பெற்றுள்ளார்