கார்டியன் ; விமர்சனம்


எதிலும் அதிர்ஷ்டம் இல்லாதவராக இருக்கும் ஹன்சிகா வேலை தேடி சென்னைக்கு வருகிறார். அங்கு அவருக்கு நல்ல வேலை கிடைப்பது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து சந்தோஷமான விஷயங்களும் நடக்கிறது. இதனால் குழம்பி போன ஹன்சிகாவுக்கு அப்புறம் தான் தெரிய வருகிறது இது அமானுஷ்யத்தின் வேலை என்று.

தன்னை சுற்றி வரும் பேய்க்கு ஒரு சிலரை பழி வாங்க வேண்டும் என்ற வெறி இருக்கிறது. நான்கு பேரை கொலை செய்யவிருப்பதாகவும் அந்த அமானுஷ்யம் ஹன்சிகாவிடம் கூறுகிறார்.இதனால் அதிர்ச்சியடைகிறார். யார் அந்த அமானுஷ்யம்.? எதற்காக நால்வரை கொலை செய்ய நினைக்கிறார்.?? என்பது படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா, முழு படத்தையும் தனி நபராக சுமந்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் அதிஷ்ட்டம் இல்லாதவராக நடித்து இரக்கப்பட வைப்பவர், இரண்டாம் பாதியில் பேயாக மிரட்டவும் செய்கிறார். ஆனாலும் சீனியர் நடிகை என்பதாலோ என்னவோ,ஆங்காங்கே ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங் கொடுத்து காட்சிகளை சோர்வடைய வைத்திருக்கிறார் ஹன்சிகா.

பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகிய நான்கு பேரும் வழக்கமான வில்லன்களாக நடித்திருக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன், டைகர் கார்டன் தங்கதுரை ஆகியோர் சிரிக்க வைக்க போராடுகிறார்கள். அபிஷேக் வினோத், ஷோபனா பிரனேஷ், தியா, பேபி க்ரிஷிதா ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல்,திரைக்கதையில் இருக்கும் உணர்ச்சிகளை காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.திகில் படங்களுக்கு பின்னணி இசை பெரும்பலம் என்பதை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார் சாம்.சி.எஸ்.பாடல்கள் இரசிக்க வைக்கின்றன.

படத்தின் ஆரம்பத்தில் ஹன்சிகாவை அன்லக்கியாக காட்டிய விதமும், அதன் பிறகு நிகழும் அதிசயங்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அடுத்தடுத்த காட்சிகள் குறிப்பாக பேய் வரும் காட்சிகளில் ரசிகர்களுக்கு எந்தவித பயமும் வராமல் இருப்பது படத்திற்கு பெரும் பலவீனம்.