எண்பதுகளின் காலகட்டத்தினருக்கு மலரும் நினைவுகளையும் இந்த தலைமுறையினருக்கு ஒரு இனிய வாழ்வியலையும் அறிமுகப்படுத்தும் படம் குரங்கு பெடல்.
சிறுவயதில் தனக்கு நடந்த சம்பவத்தால் சைக்கிளையே வெறுத்து பெரிய ஆளான பின்னும் கூட சைக்கிள் ஓட்டக் கூடக் கற்றுக் கொள்ளாத எங்கு போனால் நடந்தே செல்வதால் நடராஜா சர்வீஸ் என அனைவராலும் கிண்டலாக அழைக்கப்படுகிறார் காளி வெங்கட். அவரது மகன் சொந்த சைக்கிள் இல்லாததால் வாடகை சைக்கிள் எடுத்து கற்றுக் கொள்ள முயற்சிக்கிறான்.
ஆனால் காளி வெங்கட், தனது மகனின் சைக்கிள் ஆசையை புரிந்துக்கொள்ளாமல் காசு கொடுக்க மறுக்கிறார். ஆனால், எப்படியாவது சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவரது மகன் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.
கதையின் முதன்மை கதாபாத்திரமாக விளங்கும் சிறுவன் மாரியப்பனாக மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன் நடித்திருக்கிறார். இந்த வயதில் இத்தனை இயல்பான நடிப்பா? என வியக்க வைக்கிறார். அவரது தந்தையாக காளிவெங்கட். சைக்கிள் ஓட்ட தெரியாததால் தன்னை நடராஜா சர்வீஸ் என்று ஊர் மக்கள் கிண்டல் செய்வதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், மகன் பேசும் போது அதன் வலியை உணரும் விதத்தில் நடிப்பில் சபாஷ் பெறுகிறார்.
கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சிறுவர்கள். கொங்குத் தமிழ் பேசுவது பெற்றோர்களுக்கு குறிப்பாக தந்தை மீது பயபக்தி கலந்த மரியாதையுடன் உறவை பேணுவது.. எண்பதுகளில் தமிழக கிராமங்களில் உள்ள சிறார்கள் வாழ்வியலை நேர்த்தியாக விவரித்திருப்பது… என அச்சு அசலாக மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்து இருக்கிறார்கள்.
சிறுவனின் அக்காவாக நடித்த தக்ஷனா, அம்மாவாக நடித்த சாவித்திரி, வாத்தியார் வேடத்தில் நடித்த செல்லப்பா, தோல் பாவை கலைஞராக நடித்த குபேரன் என அனைவரும் கொங்கு மாவட்ட கிராமத்து மனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுமீ பாஸ்கரன், கோடைக்காலத்தின் வெப்பத்தையும், கிராமத்து நீர் நிலைகளின் குளிர்ச்சியையும், புழுதி படர்ந்த நிலப்பரப்புகளையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஜிப்ரானின் இசையில், பிரம்மாவின் வரிகளில் பாடல்கள் கிராமத்து வாழ்க்கையையும், சிறுவர்களின் மனங்களையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.
எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பனின் ‘சைக்கிள்’ சிறுகதையை மையமாக கொண்டு சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் கமலக்கண்ணன் மாஸ்டர் சந்தோஷ் சைக்கிள் கற்றுக் கொள்ளும் போது நடைபெறும் விஷயங்கள் எண்பதுகளில் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் ஒரு சம்பந்தம் இருக்கும் அந்த வகையில் விடுமுறையில் சைக்கிள் கற்றுக்கொள்ளும் விஷயத்தை இயக்குனர் கமலக்கண்ணன் படம் பார்க்கும் நம்மை ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனாக மாற்றிவிட்டார்.
இந்த மொபைல் போன் காலத்திய குழந்தைகள் மிஸ் பண்ணும் ஒரு உலகத்தை தியேட்டர்களுக்கு அழைத்து சென்றாவது அவர்களுக்கு காட்டுங்கள் பெற்றோர்கள்.