மகாராஜா ; விமர்சனம்


பல முன்னணி ஹீரோக்களுக்கு அவர்களது 50 படங்கள் வெற்றிகரமாக அமைந்ததில்லை. தற்போது விஜய்சேதுபதியின் 50வது படமாக வெளியாகி இருக்கும் மகாராஜா அந்த விதியை மாற்றி எழுதியுள்ளதா ? பார்க்கலாம்.

முடி திருத்தும் வேலை செய்யும் விஜய்சேதுபதி, தனது மனைவி இறந்த நிலையில் பள்ளியில் தனது மகளை படிக்க வைத்து வருகிறார். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் உள்ள மகளை வெளியூர்களில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுப்பி வைக்கிறார். இவர்கள் இருவரும் தங்களுக்கு உயிருக்கு உயிராக நினைப்பது தங்கள் வீட்டில் உள்ள லஷ்மி என்கிற குப்பை தொட்டியை தான். காரணம் சிறு வயதில் தனது மகளின் உயிரை காப்பாற்றியது என்பதால்.

ஆனால் மகள் வெளியூர் போயிருந்த சமயத்தில் அந்த குப்பைத் தொட்டி திருடு போய் விடுகிறது. இதுகுறித்து புகார் அளிக்க போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார் விஜய்சேதுபதி. அங்கு போலீசார் ஆரம்பத்தில் அலைக்கழிக்கின்றனர். பின் போலீஸ் அதிகாரியான நட்டி தனக்கு அதிக பணம் தந்தால் அந்த குப்பை தொட்டியை கண்டுபிடித்து தருவதாக கூறுகிறார். வெறும் 500 ரூபாய் மதிப்புள்ள குப்பை தொட்டியை கண்டுபிடித்து தருவதற்கு 7 லட்சம் ரூபாய் தருவதாக விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டு அவ்வப்போது பணத்தையும் தருகிறார்.

எதற்காக அந்த குப்பைத் தொட்டியை கண்டுபிடிக்க விஜய் சேதுபதி இவ்வளவு செலவு செய்கிறார் ? மகள் திரும்பி வருவதற்குள் கண்டுபிடித்தாரா ? இல்லையா என்பது மீதிக்கதை. இதற்கு பின்னணியில் யாருமே எதிர்பாராத விதமாக வித்தியாசமான ஒரு பழிவாங்கும் கதையும் ஒளிந்துள்ளது. யார் யாரை பழி வாங்குகிறார்கள் ? கடைசியில் என்ன நடந்தது என்பதை விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார்கள்.

மகள் மீது வெறித்தனமான பாசம் வைத்திருக்கும் தந்தையாக மகாராஜா என்ற கதாபாத்திரத்தில் இறுக்கமாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, தனது உடல் மொழி மூலமாகவே ஒட்டு மொத்த உணர்வுகளையும் வெளிப்படுத்தி கதாபாத்திரத்தை தாங்கி பிடித்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் வில்லன் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் அலட்டிக் கொள்ளாத நடிப்பு, அடுத்த பக்கம் நட்டி நடராஜின் மிரட்டல் நடிப்பு ஆகியவையும் படத்தை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் நகர்த்துகின்றன. நாயகி மம்தா மோகந்தாஸுக்கு வேலை குறைவு. அதேசமயம் அபிராமி நடிப்பில் அனுதாபத்தை அள்ளிக்கொள்கிறார்.

காமெடி வேடங்களில் சிரிக்க வைத்துக் கொண்டிருந்த சிங்கம் புலி, வேறு ஒரு முகத்தை காட்டி மிரட்டியிருக்கிறார். பாரதிராஜா, அருள்தாஸ், முனீஷ்காந்த், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சச்சினா மெமிதாஸ், பாய்ஸ் மணிகண்டன், வினோத் சாகர் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் திரைக்கதையோட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

தாயே தாயே பாடல் மூலம் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத்.இந்தத் திரைக்கதைக்கு பின்னணி இசை மிக மிக முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார். தினேஷ் புருசோத்தமன் ஒளிப்பதிவில் நெருக்கக் காட்சிகள் அதிகம்.அந்தத் துணிவு அவருக்கும் படத்துக்கும் பலம்.
படம் முழுவதிலும் வெவ்வேறு வடிவில் சஸ்பென்ஸ்கள் பயணிப்பது நன்றாக இருந்தாலும், நான்-லீனர் முறையில் கதையை சொன்ன விதத்தில் எந்தெந்த காட்சிகள் எந்தெந்த காலகட்டத்தில் நடக்கின்றன என்பதில் பல நேரம் குழப்பமே நிலவுகிறது. ஆனால் போகப்போக, ஓ.. இதற்குத்தானா இது என லேட்டாக புரிந்துகொள்ளவும் முடிகிறது.

குரங்கு பொம்மை படமாகட்டும் மகாராஜாவாகட்டும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கவேண்டும், அதுவும் வித்தியாசமான தண்டனையாக இருக்கவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் நித்திலன் சாமிநாதன்.

50வது படத்தில் விஜய்சேதுபதிக்கு வெற்றிக்கனியையும் ருசிக்க கொடுத்துள்ளார்.