விஜய்சேதுபதி ஏற்கனவே ஹிந்தியில் நுழைந்து ஜவான் படத்தில் வில்லனாக நடித்துவிடாலும் முதன்முறையாக பாலிவுட்டில் அவர் கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் இந்த மெர்ரி கிறிஸ்துமஸ். விஜய்சேதுபதிக்கு இந்தப்படம் பாலிவுட்டில் சிவப்பு கம்பளம் விரித்துள்ளதா..? பார்க்கலாம்.
துபாயிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் இன்ஜினியர் விஜய் சேதுபதி பெண் குழந்தையுடன் இருக்கும் கத்ரினா கைஃப்பை ஒரு ஹோட்டலில் சந்திக்கிறார். இந்த நட்பு டேட்டிங் ஆக மாறுகிறது. குழந்தையை தூங்க வைத்துவிட்டு விஜய் சேதுபதியுடன் ஜாலியாக ஊர் சுற்றி விட்டு வரும் கத்ரினா வீட்டுக்கு வரும்போது அவர் கணவர் இறந்து கிடக்கிறார். அதை பார்த்தவுடன் தப்பிக்க பார்க்கும் விஜய் சேதுபதி நான் ஒரு இன்ஜினியர் இல்லை என சொல்கிறார். அதைத்தொடர்ந்து உண்மையில் அவர் யார்? கொலையின் பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் கதை.
விஜய்சேதுபதியின் முகபாவங்களும் உடல்மொழியும் கத்ரினா கைஃப்பை மட்டும் ஈர்க்கவில்லை, படம் பார்ப்போரையும் ஈர்க்கிறது. அவருடைய காதல்கதையைச் சொல்வதும் அதில் இருக்கும் படிப்படியான முன்னேற்றம் சுவாரசியம். இறுதிக்காட்சிகளும் அப்போது விஜய்சேதுபதி எடுக்கும் முடிவும் வரவேற்புப் பெறும் விதமாக அமைந்திருக்கிறது.
நடுத்தர வயதுப்பெண்ணாக இருந்தாலும் அதற்கேற்ற வேடத்தை ஏற்றிருந்தாலும் அனைவரும் இரசிக்கும்படி இருக்கிறார் கத்ரினா கைஃப். நடிப்பிலும் குறைவில்லை. கத்ரீனாவின் வாய் அசைவிற்கு ஏற்ற தமிழ் டப்பிங் செய்து ஒரு முழுமையான தமிழ் படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்தியுள்ளனர்.
போலீஸ் அதிகாரிகளாக வரும் ராதிகா சரத்குமார், சண்முக ராஜன் இருவரும் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்
பிரீத்தமின் பின்னணி இசை, பாடல் என அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது. மது நீலகண்டனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ஓவியம் போல் இருக்கிறது. கதை இரவு நேரத்தில் பயணிப்பதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதாலும், சிவப்பு வண்ணங்களாலும், விளக்கு ஒளியாலும் காட்சிகளை அலங்கரித்து அழகு சேர்த்திருக்கிறார்
மிக மிக பொறுமையாக நகரும் திரைக்கதை கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தினாலும் திகில், மர்மம், ரொமான்ஸ், காமெடி என சுவாரசியமாகவும் இருக்கிறது. இரண்டாம் பாதியும், காவல் நிலையத்தில் நடைபெறும் கடைசி 20 நிமிட காட்சியும் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சீட் நுணியில் உட்கார வைக்கும் விதத்தில் இருக்கிறது. குறிப்பாக பரபரப்பைக் கடத்தும் க்ளைமாக்ஸ் காட்சித்தொகுப்பை வசனங்கள் ஏதுமில்லாமல், சிம்பொனியை இசைக்கவிட்டு சுவாரஸ்யமான ‘சீட் எட்ஜ்’ அனுபவமாகத் தந்தவிதத்தில் ஸ்ரீராம் ராகவனின் முத்திரை அழுந்தப் பதிகிறது.
சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றாலே வேகமாக இருக்க வேண்டும் என்ற பாணியை தவிர்த்துவிட்டு, புதிய விதமாக இந்த கதையை நகர்த்தியதர்காக இயக்குனர் ஸ்ரீராம் ராகவனை தாரளமாக பாராட்டலாம்.