மிஷன் சாப்டர் 1 ; விமர்சனம்


சமீபகாலமாக அருண் விஜய்யின் படங்கள் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இன்று அவருடைய மிஷன் சாப்டர் 1 படம் வெளியாகி இருக்கிறது. ஆக்சன் பிரியர்களுக்கு சரியான பொங்கல் விருந்தை கொடுத்துள்ளாரா அருண்விஜய் ? பார்க்கலாம்.

லண்டனில், உளவாளியாக அருண் விஜய் தனது அடையாளத்தை மறைத்து ஒரு மிஷினாக செல்கிறார். ஆனால் அவரது வேலையில் சிக்கல் ஏற்பட லண்டன் போலீஸாரால் பிடிபட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு அவர் ஒரு கலவரத்தை உருவாக்கி சிறையிலிருந்து தப்பித்து தனது மகளைப் பார்க்க வருகிறார், ஆனால் அருண் விஜயை இந்த ரகசிய பணிக்காக அனுப்பியவர் அருண் விஜய்யின் மகளை பிணை கைதியாக கொண்டு செல்கிறார், தன் மகளை காப்பாற்ற அருண் விஜய் அந்த வேலையை எப்படி செய்து முடிக்கிறார், என்பதே மிஷன்: சேப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே) திரைப்படத்தின் கதை.

மகளின் உயிரை காப்பாற்ற போராடும் ஒரு எளிமையான தந்தையாக அறிமுகமாகி ரசிகர்களை ஈர்க்கும் அருண் விஜய், லண்டன் சிறைச்சாலையில் எடுக்கும் ஆக்‌ஷன் அவதாரம் பிரமிக்க வைகிறது. ஒவ்வொரு காட்சியிலும் மிக கடுமையான உழைப்பை கொடுத்திருப்பவர், பல ஆக்‌ஷன் காட்சிகளை ரியலாக செய்து அசத்தியிருக்கிறார்.

சிறைச்சாலை அதிகாரியாக நடித்திருக்கும் எமி ஜாக்சன், சில அதிரடி காட்சிகளில் அமர்க்களப்படுத்தினாலும், பெரும்பாலும் அருண் விஜய் செய்யும் சாகசங்களை வேடிக்கை பார்ப்பதையே வேலையாக செய்திருக்கிறார். செவிலியர் வேடத்தில் நடித்திருக்கும் நிமிஷா சஜயன் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் பரத் போபண்ணா, சர்தார் வேடத்தில் நடித்திருக்கும் அபி ஹாசன், விரஜ், ஜேசன் ஷா, சிறுமி இயல் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அளவான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சந்தீப் கே விஜய் அதிரடி காட்சிகளை தன் ஒளிப்பதிவின் மூலம் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.

தாண்டவம் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு முழுநீள ஆக்சன் படத்தை கொடுக்க முயற்சித்துள்ள இயக்குனர் விஜய் படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகளால் நிரப்பியுள்ளார்.குறிப்பாக படத்தில் இடம்பெற்றுள்ள மிளகாய் பொடி காட்சி ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறது. அருண் விஜயின் லண்டன் வருகை மற்றும் அவர் சிறைச்சாலையில் சிக்கிக்கொள்வது, மறுபக்கம் பயங்கரவாத குழுவின் சதிதிட்டம் ஆகியவை படத்தின் முதல் பாதியை எதிர்பார்ப்புடன் பயணிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் அருண் விஜய் யார் என்பது தெரிந்தவுடன் நம் ஆர்வம் அடங்கி விடுகிறது. படத்தின் திரைக்கதையில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

மற்றபடி ஆக்சன் பிரியர்களுக்கு கொடுத்த காசுக்கு நல்ல பொழுதுபோக்கு படம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.