நந்தன் ; விமர்சனம்


கிராமத்தில் உயர்சாதியை சேர்ந்த பாலாஜி சக்திவேல் குடும்பம் தான் தலைமுறை தலைமுறையாக தலைவர் பதவியில் இருந்து வருகிறார்கள். திடீரென அந்த ஊர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் போட்டியிடும் ரிசர்வ் தொகுதியாக மாற்றப்படுகிறது. இதனால் பாலாஜி சத்திவேல் அதிர்ச்சி அடைந்தாலும் தான் வகித்து வந்து பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தன்னிடம் வேலை செய்யும் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சிறந்த விசுவாசி சசிகுமாரை போட்டியிட வைத்து தனது கைப்பாவையாக வைத்துக்கொள்ள நினைக்கிறார். அதன்பின்னால் ஏற்படும் நிகழ்வுகளின் தொடர்புகளை நந்தன் படத்தின் கதைக்களம்.

அம்பேத்குமார் என்ற கதாபாத்திரத்தில் யாரும் ஏற்கத் தயங்கும் ஒரு பாத்திரத்தில் துணிந்து நடித்திருக்கிறார் சசிகுமார். எந்த நேரமும் வெத்தலை குதப்பும் வாய், தோள்பட்டை வரை வளர்ந்த முடி, அழுக்கு பனியன், என இன்னொரு சப்பாணியாக தன்னுடைய இமேஜை முற்றிலும் மாற்றிக் கொண்டு .தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் வேறுபாடு காட்டி, வியக்க வைத்திருக்கிறார்

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி பெரியசாமி, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலஜி சக்திவேல், சாதி வெறியாட்டத்தின் வக்கிரத்தை தனது நடிப்பு மூலம் திரையில் கொண்டு வந்து பார்வையாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறார்.

கிராம நிர்வாக அதிகாரியான சமுத்திரக்கனி,ஜிஎம்.குமார், ஸ்டாலின், ஞானவேல், மாதேஷ், மிதுன்,சக்தி சரவணன், சித்தன் மோகன் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது. ஆர்.வி. சரனுடைய ஒளிப்பதிவு அந்த ஊரின் இயல்பை திரையில் பிரதிபலிக்கிறது.

ஆளறதுக்குதான் அதிகாரம் தேவைன்னு நினைச்சிட்டு இவ்வளவு நாள் ஒதுங்கியே இருந்தோம். ஆனா, இங்க வாழ்றதுக்கே அதிகாரம் தேவைப்படுது என்பது போன்ற வசனங்கள் முகத்தில் அறைகின்றன. ‘ஊராட்சி மன்றங்களில் நடக்கும் சாதி பாகுபாடு மற்றும் ஆதிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு நேர்ந்த சில கசப்பான உண்மை சம்பவங்களை வெளி உலகிற்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில் இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் இரா.சரவணனுக்கு பாராட்டுக்கள்