சினிமாவுக்கு இணையாக வெப்சீரிஸ்களும் ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்க கடும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். 8 எபிசோடுகள் என்றாலும் ரசிகர்களை எங்கும் நகர விடாமல் கட்டிப்போடும் கடினமான சவாலையும் வெப்சீரிஸ்கள் எதிர்கொள்கின்றன. அப்படி தற்போது வெளியாகி உள்ள பானி பூரி வெப்சீரிஸ் ரசிகர்களை வசியப்படுத்தும் வகையில் உருவாகி இருக்கிறதா ? பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை சமூகத்திற்கு எதிரானது என்பது போலத்தான் பார்க்கப்படுகிறது. அதற்கேற்றார்போல் அத்தகைய வாழ்க்கை முறையை மையப்படுத்தியே வெப்சீரிஸ்களும் அடல்ட் ஒன்லியாக மட்டுமே இருக்க வேண்டும் என யாரோ எழுதி வைத்துவிட்டது போல அப்படிப்பட்ட கதைகளே வெளியாகி வருகின்றன.
ஆனால் அதை மாற்றியமைத்து, குடும்ப அனுமதியோடு ஒரு லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையை மையப்படுத்திய இணையத் தொடரை கண்ணியமாகவும், குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க கூடிய ஒரு தொடராகவும் கொடுக்க முடியும் என ஒரு புதிய முயற்சியை எடுத்து இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.
லிங்காவும் சம்பிகாகவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். லிங்கா தங்களது காதலை திருமணத்தில் கொண்டு சேர்க்க நினைக்கிறார். ஆனால் சம்பிகாவுக்கு அவரது தோழியின் திருமண வாழ்க்கை கசப்பாக முடிந்து விட்டதால் திருமணத்திற்கு பிறகு ஆண்கள் எல்லோருமே மாறிவிடுவார்கள் என்கிற மனோபாவம் உருவாகிறது. இதனால் லிங்காவுடன் காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்கிறார். இதை அறிந்து அதிர்ச்சியான லிங்கா சம்பிகாவின் வீட்டிற்கு சென்று காரணம் கேட்கிறார்.
அப்போதுதான் இவர்களது காதல் பற்றி தெரிந்து கொண்ட சம்பிகாவின் தந்தை இளங்கோ குமரவேல் இவர்களுக்குள் காதல் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஒரு ஆலோசனை வழங்குகிறார். அதன்படி காதலர்கள் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் ஒரு வாரம் தனியாக வாழ்க்கை நடத்துமாறும் அதில் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இருக்கிறதா என்பது புரிந்துவிடும் என்றும் இதுவரை சினிமாக்களில் எந்த தந்தையும் சொல்லாத ஒரு ஐடியாவை செய்கிறார். அதன்படி இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் நுழைகிறார்கள். அந்த வாழ்க்கை இருவரது எண்ணங்களையும் மாற்றியதா ? இருவரையும் ஒன்றிணைத்ததா ? இல்லை பிரித்ததா ? இதுதான் மீதிக்கதை.
ஜெயம் ரவி நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தை கொஞ்சம் உல்டா செய்து, லவ் ஸ்டோரி சத்யராஜ் பாணியில் ஒரு புது பிளேவர் கொடுத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.
திரைப்படங்களை விட வெப்சீரிஸ்கள் மூலம் நடிகர் லிங்கா ரசிகர்களிடம் எளிதாக சென்று சேர்ந்துள்ளார். இந்த பானி பூரி வெப்சீரிஸ் மூலம் அதை இன்னும் அழகாக தக்க வைத்துக் கொண்டுள்ளார். காதலை மையப்படுத்திய ஒரு தொடரில் மிக இயல்பாகவும், வெள்ளந்தியாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக காதலை பெறுவதற்கு முன், காதலை பெற்ற பின் என ஒரு சராசரி இளைஞனின் குணாதிசயத்தை அழகாக பிரதிபலித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பெரும்பாலான கதாநாயகிகள் இதுவரை நடித்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை சம்பிகா ஆம்.. ரோபோக்களை உருவாக்கும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. பார்க்க அழகாக இருக்கிறார் இருந்தாலும் நடிப்பிலும் முக பாவனைகளிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் அவரது கதாபாத்திரம் இன்னும் சிறப்பாக ரசிகர்களிடம் சென்று சேர்ந்து இருக்கும்.
சம்பிகாவின் தந்தையாக நடித்திருக்கும் இளங்கோ குமரவேல், ஜாலியான தந்தையாக மட்டும் இன்றி மகளை சரியாக புரிந்துக்கொண்ட தந்தை வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். லிங்காவின் நண்பராக வரும் வினோத் சாகர், வரும் ஆரம்ப காட்சிகள் நம்மை சிரிக்க வைத்தாலும் கதை போகிற போட்டு ஒரு குணசித்திர நடிகராக மாறிவிடுகிறார். நாயகனின் அண்ணனாக நடித்திருக்கும் ஸ்ரீகிருஷ்ண தயாள், அண்ணியாக நடித்திருக்கும் கனிகா இருவரும் தாங்கள் பொருத்தமான தேர்வு என்பதை நிரூபிக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு, கதை முழுவதையும் கட்டிடங்களுக்குள் வைத்தே காட்சிப்படுத்தி இருந்தாலும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். இசையமைப்பாளர் நவ்னீத் சுந்தரின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது
லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை என்பது இளைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை அல்ல, பெற்றோர்களுக்கும் சம்மந்தம் இருக்கும் வாழ்க்கை என்பதை நகைச்சுவை பாணியில் அதே சமயம் மனதில் அழுத்தமாக பதியுமாறு கூறியுள்ளார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால். காதல் காட்சிகள் மற்றும் காதல் வசனங்கள் என அனைத்தையும் மிக நாகரீகமாக கையாண்டிருக்கும் இயக்குநர் பாலாஜி வேணுகோபால், அழகு என்பது உருவம் சார்ந்தது அல்ல உள்ளம் சார்ந்தது என்பதையும், மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
அதேசமயம் காட்சிகளால் கதையை நகர்த்துவதற்கு பதிலாக கதாபாத்திரங்களை பேச வைத்தே 8 பாகங்களை படமாக்கியிருக்கும் பாலாஜி வேணுகோபால் இயக்குநராக சிந்தித்ததை விட, எழுத்தாளராக அதிகம் சிந்தித்திருக்கிறார் அந்த வகையில் இந்த பானி பூரி வெப்சீரிஸ் காதல் குழப்பத்தில் தவிக்கும் இளைஞர்களுக்கு ஒரு சரியான வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
பானி பூரி ; காதலர்களுக்கான கோனார் நோட்ஸ்