அஸ்வின்ஸ் ; விமர்சனம்

தரமணி, ராக்கி படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் வசந்த் ரவி தற்போது ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் அந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக தற்போது வசந்த் ரவி கதாநாயகனாக நடித்துள்ள அஸ்வின்ஸ் திரைப்படம் ஜூன்-23ல் வெளியாகிறது. ஹாரர் பின்னணியில் முழுநீள திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை தருண் தேஜா இயக்கியுள்ளார் படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

நாயகன் வசந்த் ரவி, சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகிய ஐந்து பேரும் இந்தியாவில் இருந்து லண்டன் செல்கிறார்கள்.. எதற்காக என்றால், லண்டனில் உள்ள தீவில் ஆடம்பரமான பங்களா ஒன்று இருக்கிறது. அதில் வாழ்ந்த பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பிரியா ராமன், அங்கிருந்த 15 ஊழியர்களை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துக்கொண்டதாகவும், கைப்பற்றப்பட்ட அவருடைய சடலம் திடீரென்று மாயமாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது இது குறித்த உண்மை நிலவரத்தை வீடியோ படமாக எடுத்து வருவது தான் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்.

அவரது சடலம் எப்படி மாயமானது, எங்கிருக்கிறது என்பது இதுவரை புரியாத புதிராக இருப்பதோடு, அந்த பங்களாவில் பல அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதை கண்டுபிடிக்க சென்ற இடத்தில் வசந்த் ரவி மற்றும் அவரது குழுவினர் எதிர்கொள்ளும் சவால்கள், திகில் சம்பவங்கள், அமானுஷ்ய நிகழ்வுகள் இவற்றையெல்லாம் கடந்து அவர்கள் உண்மையை கண்டுபிடித்தார்களா என்பது தான் மீதிக்கதை.

நாயகன் வசந்த் ரவிக்கு ஏற்ற கச்சிதமான கதாபாத்திரம். வசனம் அதிகம் இல்லை என்றாலும், நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு வலுவூட்டியுள்ளார் குறிப்பாக காட்சிகளை பார்த்து நாம் பயப்படுவதை விட அவருடைய ஒவ்வொரு அசைவும், பயம் கலந்த கண்களும் படம் பார்ப்பவர்களை பதற வைக்கிறது. தமிழ் சினிமாவில் அவர் சரியான பாதையில் பயணிக்கிறார் என்பதற்கு இந்தப்படம் இன்னொரு உதாரணம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப்படத்தின் மூலம் தமிழில் தலைகாட்டி உள்ளார் நடிகை விமலா ராமன். இந்த படத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் விமலா ராமன், இறுதிக்காட்சியில் தனது நடிப்பு மூலம் படம் பார்ப்பவர்களின் இதய துடிப்பை எகிற வைத்துவிடுகிறார்.

சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகியோர் பங்களாவுக்குள் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்கும் காட்சிகளில் அவர்களும் பயந்து நம்மையும் மிரள வைக்கிறார்கள்.

இந்த படத்தில் மிக முக்கியமான இரண்டு தூண்கள் என்றால் ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சகே மற்றும் இசையமைப்பாளர் விஜய் சித்தார்த் இருவரும் என்று உறுதியாக கூறலாம். படம் முழுவதும் இருட்டில் நடைபெறுவது போல இருந்தாலும் மிக நேர்த்தியாக காட்சிகளை கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சகே. அதே போல விஜய் சித்தார்த்தின் பின்னணி இசையும், சச்சின் மற்றும் ஹரி ஆகியோரது ஒலிக்கலவையும் படம் பார்ப்பவர்களை இந்நேரமும் திகிலிலேயே வைத்திருக்கிறது.

குறும்படமாக தான் எடுத்த ஒரு கதையை கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் முழு நீள திரைப்படமாக எடுத்து மிரட்டியிருக்கிறார் இயக்குனர் தருண் தேஜா, அஸ்வினர்கள் கதையை வைத்துக்கொண்டு ஒரு முழுமையான திகில் திரைக்கதையுடன் நம்மை இரண்டு மணி நேரம் வசியப்படுத்தி விடுகிறார்.

குறிப்பாக தொழில்நுட்ப ரீதியாக ஒரு திகில் படத்தை எப்படி ரசிகர்களுக்கு பரிசளிக்க வேண்டும் என்கிற வித்தை தெரிந்த மனிதராக இந்த படத்தின் மூலம் வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்து இருக்கிறார் இயக்குனர் தருண் தேஜா.

அஸ்வின்ஸ் ; வெற்றி வீரர்கள்

ரேட்டிங் 3.5 / 5