பரம்பொருள் ; விமர்சனம்


சிலை கடத்தலை மையப்படுத்திய இன்னொரு க்ரைம் திரில்லர் தான் இந்த பரம்பொருள். சகோதரியின் மருத்துவ சிகிச்சைக்கு மிகப்பெரிய அளவில் பணம் தேவைப்பட ஒரு கட்டத்தில் சிலை வியாபாரி ஒருவர் வீட்டில் இருந்து விலை உயர்ந்த சிலை ஒன்றை திருடுகிறார் அமிதாஸ். வேறு ஒரு வழக்கில் எதிர்பாராத விதமாக போலீஸ் அதிகாரி சரத்குமாரிடம் மாட்டிக்கொள்ள ஜெயிலுக்கு போகாமல் தப்பிப்பதற்காக தன்னிடம் விலை உயர்ந்த சிலை இருப்பதாகவும் விற்பதில் ஆளுக்கு பாதி பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று ஆசை காட்டுகிறார்.

சிலையை வாங்குவதற்கான ஆளை தேடி கண்டுபிடித்து அதற்கான டீல் பேசும்போது முதல் சிட்டிங்கில் பேரம் படியவில்லை. இதில் ஏற்படும் தாமதத்தால், பின்னர் இவர்கள் எதிர்பார்க்கும் தொகை தர அவர்கள் முன் வந்தாலும் இவர்கள் வைத்திருந்த சிலைக்கு புதிய ரூபத்தில் ஆபத்து தேடி வருகிறது. அது என்ன ஆபத்து ? அதிலிருந்து சிலையை இவர்கள் காப்பாற்றினார்களா ? அரசாங்கத்திற்கு தெரியாமல் இந்த சிலையை கைமாற்றி காரியம் சாதித்தார்களா ? சகோதரியின் மருத்துவ செலவை அமிதாஸ் சரிக்கட்டினாரா என்பதற்கு மீதிக்கதை விடை சொல்கிறது.

ஒரு ஸ்மக்ளிங் திரில்லர் எப்படி இருக்க வேண்டுமா அந்த மீட்டருக்கு கொஞ்சமும் கூடாமல் குறையாமல் இந்த பரம்பொருள் படத்தை உருவாக்கியுள்ளார்கள். குறிப்பாக இதுவரை அவ்வளவாக ரசிகர்கள் மத்தியில் அறியப்படாத அமிதாஸ் மற்றும் போலீஸ் என்றாலே இவர்தான் என்று சொல்லப்படுகிற சரத்குமாரும் இணைந்து மொத்த படத்தையும் தாங்கி இருக்கிறார்கள்.

என்னவோ தெரியவில்லை சரத்குமாருக்கு இந்த வருடம் நல்ல நல்ல கதாபாத்திரங்களாக வருகிறது. இதற்கு முந்தைய படத்திலும் சரி இந்த படத்திலும் சரி இரண்டிலுமே அவர் போலீஸ் தான் என்றாலும் இரண்டிற்குமே நடிப்பில் மிகப்பெரிய வித்தியாசம் காட்டி இருக்கிறார் குறிப்பாக ஒரு கரப்சன் போலீஸ் அதிகாரி எப்படி இருப்பார் என்பதை சரத்குமார் அச்சுவாசலாக பிரதிபலித்திருக்கிறார்.

இளம் நடிகர் அமிதாஸ் மட்டும் சளைத்தவரா என்ன ? இவர் பார்ப்பதற்கு புதுமுகம் என்பது போலவே இல்லாமல் அந்த கதையுடனேயே நம்மையும் அழைத்துக் கொண்டு பயணிக்கும் விதத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சரத்குமாரும் அமிதாஸும் மட்டுமே முக்கால்வாசி படத்தை ஆக்கிரமித்து விடுகிறார்கள் சீரியஸான படமாக சென்று விடாமல் சரத்குமாரின் காமெடி இதை ஜஸ்ட் ஜாலியாக நகர்த்தி சென்றுள்ளது.

கதாநாயகியாக காஷ்மிரா பரதேசிக்கு வசனங்கள் குறைவு என்றாலும் முகபாவங்களால் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் நம்மை கண் கொட்டாமல் பார்த்து ரசிக்க வைத்து விடுகிறார். அதேசமயம் கடைசி அரை மணி நேரத்தில் என்ன நடக்குமோ என்கிற ஒரு திக் திக் உணர்வை நம்மிடம் திணித்து விடுகிறது.

இவர்களை தாண்டி நம்மை கவனம் ஈர்ப்பவர் இயக்குனர் பாலாஜி சத்திவேல்.. தனது இடத்தை பறிகொடுத்த விரக்தியில் அவர் சரத்குமாருடன் டீல் பேசும் காட்சியில் கைதட்டலை அள்ளுகிறார். அவர் யாரென்கிற விஷயம் தெரிய வரும்போது நம்ம அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அதேபோல சிலை டீலிங் பார்ட்டியான வின்சென்ட் அசோகன், அவரது கூட்டாளி இருவரும் நம்மை எந்நேரமும் திக்திக் மன நிலையிலேயே வைக்கிறார்கள்.

கிளைமாக்ஸில் சரத்குமாருக்கு ஏற்படும் அந்த ட்விஸ்ட் அதன் பின்னணியில் மறைந்துள்ள அடடே கிளாஸ் பேக் எல்லாமே கச்சிதமாக கோர்க்கப்பட்டுள்ளது. இயக்குனர் சி.அரவிந்தராஜ் தனது முதல் படத்திலேயே, தான் விஷயம் உள்ளவர் ரசிகர்களை கட்டிப்போடுவதில் வல்லவர் என்பதை தெளிவாக நிரூபித்து இருக்கிறார்.

அந்தவகையில் பரம்பொருள் தியேட்டருக்கு வரும் ரசிகர்களை கொஞ்சம் கூட ஏமாற்றாது.