கிக் ; விமர்சனம்


டிடி ரிட்டன்ஸ் படத்தில் கிடைத்த வெற்றியின் சூடு ஆறுவதற்குள் சுடச்சுட வெளியாகி இருக்கும் சந்தானத்தின் மற்றும் ஒரு படம்தான் இந்த கிக். சந்தானத்தின் வெற்றியை இது தொடர வைத்திருக்கிறதா ? இல்லை மீண்டும் தற்காலிக தடை போட்டிருக்கிறதா ? பார்க்கலாம்.

தம்பி ராமையா முதலாளியாக இருக்கும் விளம்பர நிறுவனத்தின் ஆல்இன் ஆல் அழகுராஜா தான் சந்தானம். வாடிக்கையாளர்களை எப்படியாவது பேசி விளம்பர ஆர்டர்களை பெற்று விடுவதில் ஜித்தர். இவருக்கு போட்டியாக விளம்பர நிறுவனம் நடத்தி வரும் மனோபாலாவிடம் வேலை பார்ப்பவர் தான்யா ஹோப். அவர் சிரமப்பட்டு பிடிக்கும் கஸ்டமர்களை எல்லாம் சந்தானம் அழகாக தட்டிக் கொண்டு தன் பக்கம் இழுத்து விடுகிறார்.

இதில் தான்யாவுக்கு மட்டுமல்ல.. இன்னொரு விளம்பர கம்பெனி ஓனரான மன்சூர் அலிகானுக்கும் படுகோபம். இந்த நிலையில் சந்தானம் மார்க்கெட்டில் இல்லாத ஒரு பொருளுக்கு டம்மியாக விளம்பரம் உருவாக்கி வைத்திருக்கிறார். ஆனால் அவரது அனுமதி இல்லாமலேயே ஓனரான தம்பி ராமையா அதை வெளியிட்டு விடுகிறார்.

இதனை கெட்டியாக பிடித்துக்கொள்ளும் தான்யா ஹோப் அப்படி ஒரு பொருளே இல்லாமல் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விதமாக சந்தானம் இப்படி விளம்பரம் வெளியிட்டு கோடிகளை மோசடி செய்துள்ளார் என புகார் கொடுக்கிறார்.

வேறு வழியின்றி அப்படி ஒரு பொருள் இருக்கிறதா எனத் தேடி கண்டுபிடித்து வருவதற்காக பாங்காங் கிளம்பி செல்கிறார் சந்தானம். அவரது திட்டத்தை அறிந்து தான்யா ஹோப்பும் பாங்காங் செல்கிறார். சென்ற இடத்தில் சந்தானம் தான் தனது எதிரி என தெரியாமலேயே அவருடன் காதலில் விழுகிறார். பாங்காங்கில் மருத்துவர் பிரம்மானந்தத்திடம் இருந்து அப்படி ஒரு பொருளை தனக்கு உருவாக்கிக் கொடுக்க சொல்கிறார். இவரது திட்டம் அறிந்து அதை தடுக்க முயற்சிக்கிறார் தான்யா.

இறுதியில் சந்தானம் தான் நினைத்ததை சாதித்தாரா ? இல்லை தான்யா ஹோப் சந்தானத்தை பழி தீர்த்தாரா என்பது மீதிக்கதை.

டிடி ரிட்டர்ன்ஸ் படத்தைப் பார்த்துவிட்டு அந்த உற்சாகத்துடன் உள்ளே வரும் ரசிகர்களை ஊடு கட்டி அடித்திருக்கிறார் சந்தானம். அவரைச் சொல்லி குற்றமில்லை. கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் தமிழ் ரசிகர்கள் இப்படித்தான் காமெடியை ரசிக்கிறார்கள் என தானாகவே நினைத்துக்கொண்டு இந்த படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார் போல.

சந்தானமும் நமக்கு என்ன வந்தது நம் வேலையை பார்த்து விட்டுப் போவோம் என ஹீரோவின் வேலையை மட்டும் பார்ப்பதால் படம் முழுவதும் ரசிகர்களுக்கு தேவையான காமெடி சுத்தமாக மிஸ்ஸிங் ஆகிறது. அவருக்கு பதிலாக தம்பி ராமையா, கோவை சரளா, இவர்கள் போதாது என்று பிரம்மானந்தம், மனோபாலா, மன்சூர் அலிகான் என எல்லாருமே காமெடி என்கிற பெயரில் கதறித் தீர்க்கிறார்கள்.

அதிலும் ஹை டெசிபலில் தம்பி ராமையா பேசும்போது, இந்த மாடுலேஷனை இவர் எப்போது விடப்போகிறார் என்கிற ஆதங்கம் ஏற்படுகிறது. கோவை சரளா இன்னமும் தான் பண்ணுவது தான் காமெடி என நினைத்துக் கொண்டிருக்கிறார். அதுதான் கொடுமை.. இவர்களில் மருத்துவராக வரும் பிரம்மானந்தம் ஓரளவுக்கு நம்மை சரிக்கட்டுகிறார். சந்தானத்திற்கும் நாயகிக்கும் இடையே ஏற்படும் தகராறு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்றாலும் படம் முழுவதையும் அதைவைத்து நகர்த்திச் சென்றுள்ள இயக்குனர் பிரசாந்த் ராஜ் பலே கில்லாடி தான்.

கதாநாயகியாக தான்யா ஹோப் ஏதோ ஒரு வகையில் ஓகே தான் என்று சொல்ல வைக்கிறார். சந்தானம் ஆடுகிறார். பைட் பண்ணுகிறார்.. காமெடியை எங்கேயோ மிஸ் பண்ணிவிட்டு வந்து வந்தது போல மிகப்பெரிய ஏமாற்றத்தை தருகிறார். டிடி ரிட்டன்ஸ் படத்தின் கதையை ஓகே செய்த சந்தானமா இந்தப் படத்தையும் ஓகே செய்திருக்கிறார் என்கிற ஆச்சரியம், வீடு திரும்பும் வரை நம்மை விடாமல் பின் தொடர்கிறது.