காமெடி பிரியர்களை குறி வைத்து வெளியாகி இருக்கும் பார்ட்னர் திரைப்படம் நினைத்ததை சாதித்ததா ? பார்க்கலாம்.
ஊரில் சொந்தமாக தொழில் செய்வதற்காக லட்சக்கணக்கில் பணம் வாங்கி நட்டமடைகிறார் ஆதி. படத்தை திருப்பி தா இல்லையென்றால் உன் தங்கையை திருமணம் செய்து தா என்று கடன் கொடுத்தவர் நெருக்கடி செய்ய விரைவில் பணத்தை தருவதாக கூறி சென்னையில் இருக்கும் நண்பர் யோகிபாபுவை தேடி வருகிறார் ஆதி.
ஆனால் யோகிபாபு சின்னச்சின்ன திருட்டுகளை செய்து வண்டியை ஓட்டி வருகிறார். வேறு வழியின்றி அவருடன் சேர்ந்து சில திருட்டுகளில் ஆதியும் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் விஞ்ஞானி பாண்டியராஜனின் ஆராய்ச்சி கூடத்தில் இருந்து ஒரு பொருளை அபேஸ் செய்து வருமாறு மிக பெரிய தொகைக்கு அசைன்மென்ட் கிடைக்கிறது.
ஆனால் சென்ற இடத்தில் அங்கிருந்த ஒரு ஊசியால் யோகிபாபு திடீரென பெண்ணாக அதாவது ஹன்சிகாவாக மாறுகிறார். இதன் பிறகு நடக்கும் களேபரங்கள் தான் மீதிக்கதை.
ஆண் பெண்ணாக மாறுவது இதையெல்லாம் பார்க்கும் போது ஏற்கனவே ஆதி இதேபோல மரகத நாணயம் என்கிற ஒரு படத்தின் நடித்திருக்கிறார் என்று தோன்றுவது உண்மைதான். அதே சமயம் இந்த கதையை இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி டீல் செய்து இருக்கிறார்கள்.
இது போன்ற கதைகளுக்கு ஆதி பொருத்தமான நாயகனாகவே இருக்கிறார். அதே சமயம் அவரது கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பலமாக உருவாக்கி இருக்கலாம் என்றே தோன்றுகிறது. இடைவேளைக்கு முன்பு வரை யோகிபாபு அதிக நேரம் வந்து சென்றாலும் சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைத்து ஏமாற்றம் தருகிறார்.
ஆனால் இடைவேளைக்குப் பிறகு இவர் ஹன்சிகாவாக மாறிய பின் ஆட்டம் அவரது கைகளுக்கு போய் விடுகிறது. யோகிபாபு இடைவேளைக்கு கொஞ்சம் முன்பாகவே ஹன்சிகாவாக மாறி இருக்கக் கூடாதா என்கிற அளவுக்கு ஹன்சிகா தனது கதாபாத்திரத்தை பிரித்து மேய்ந்து இருக்கிறார். உடலால் பெண்ணாகவும் உடல் மொழியால் ஆணாகவும் என சவாலான கதாபாத்திரத்தை சமாளித்திருக்கிறார் ஹன்சிகா.
இவர்கள் தவிர ஆதியின் காதலியாக பாலக் லால்வனி, ரோபோ சங்கர் தங்கதுரை, ரவிமரியா, ஜான் விஜய், முனிஸ்காந்த், மைனா நந்தினி, பாண்டியராஜன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. ஆனால் நகைச்சுவைக்கு மிகப்பெரிய பஞ்சமும் இருக்கிறது. இவர்களை எல்லாம் இன்னும் கொஞ்சம் சரியாக பயன்படுத்தியிருக்கலாமே என்கிற எண்ணமும் ஏற்படுகிறது.
படம் நெடுகிலும் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் கடைசி 20 நிமிடங்கள் கிளைமாக்ஸை நோக்கி செல்லும் வரை கலகலப்பாகவும் கலாட்டாகவும் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் மனோஜ் தாமோதரன்.