ஹர்காரா ; விமர்சனம்


புதியவர்கள் அறிமுகமாகும் பெரும்பாலான படங்கள் காதல், கல்லூரி வாழ்க்கை, வேலையில்லா திண்டாட்டம், இதையும் விட்டால் வடசென்னை ரவுடியிசம் என்பது போன்ற களங்களிலேயே படங்களை எடுத்து வெளியிடுவது வழக்கம். எப்போதாவது அத்தி பூத்தாற்போல சில படங்கள் புதிய களங்களில் அதிகம் சொல்லப்படாத மனிதர்களைப் பற்றிய கதைகளை கருவாகக் கொண்டு வெளி வருகின்றன. அப்படி ஒரு படம் தான் தற்போது வெளியாகி உள்ள ஹர்காரா.

தென் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமத்திற்கு போஸ்ட்மேனாக பணி நியமனம் செய்யப்படுகிறார் 35 வயதாகியும் திருமணமாகாத காளி வெங்கட். எந்த ஒரு தேவைக்கும் பல மணி நேரம் பயணம் செய்தால் மட்டுமே நகரத்தை அடைய முடியும் என்கிற நிலையில், எப்படியாவது இந்த ஊரில் இருந்து வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கி விட நினைக்கிறார். அது சாத்தியம் இல்லை என்பதால் அந்த ஊரில் இருக்கும் போஸ்ட் ஆபீஸை எப்படியாவது அகற்றிவிட்டு ஒரு கூட்டுறவு வங்கியை கொண்டுவந்து விட வேண்டும் என்கிற முயற்சியில் காய்களை நகர்த்துகிறார்.

ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அந்த பகுதி மக்கள் அந்த போஸ்ட் மேனை எந்த அளவிற்கு தங்களின் வாழக்கையில் ஒரு பாதுகாவலனாக நம்பி இருக்கிறார்கள் என்பதும் அப்படி வெள்ளையர் ஆதிக்கத்தில் இருந்த சமயத்தில் ஒரு முதல் போஸ்ட்மேனாக செயல்பட்ட மாதேஸ்வரன் என்பவனின் தியாகத்தைப் பற்றியும் காளி வெங்கட்டுக்கு தெரிய வருகிறது.

இதை அடுத்து அவர் என்ன முடிவு எடுக்கிறார், யார் அந்த மாதேஸ்வரன், அப்படி என்ன தியாகம் செய்தார் என விவரிக்கிறது மீதிக்கதை.

முதிர்ந்த பிரம்மச்சாரி போஸ்ட்மேன் கதாபாத்திரத்தில் காளி வெங்கட் ஏக பொருத்தம். அந்த வயதிற்குரிய திருமணமாகாத ஏக்கம், இப்படி மலைப் பகுதியில் தனி ஆளாக நடையாக நடக்க வைத்து விட்டார்களே என்கிற ஆதங்கம், அந்த ஊர் மக்களின் அன்பான நச்சரிப்பு என எல்லாவற்றையும் தேவையான இடங்களில் சரியாக பிரதிபலித்து ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார் காளி வெங்கட். குறிப்பாக பிச்சைக்காரன் மூர்த்தியுடன் மலைப்பகுதியில் பயணிக்கும் காட்சிகளில் அவருக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் நமக்கும் மூச்சு வாங்குகிறது.

காளி வெங்கட் இந்த படத்தில் கதையின் நாயகன் என்றால் இடைவேளைக்குப் பிறகு வரும் நாயகன் ராம் அருண் காஸ்ட்ரோ வேறு விதமாக நம் மனதை ஆக்கிரமிக்கிறார். வெள்ளைக்காரர்களின் விசுவாசியாக தபால்களை பரிமாற்றம் செய்து வரும் அவர் ஒரு கட்டத்தில் தாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து முடிவெடுக்கும் இடத்தில் ஒரு தியாகியாக மாறுகிறார். குறிப்பாக காதல் காட்சி, சண்டை, ஆக்ரோஷம் என எல்லாவற்றையும் கலவையாக வெளிப்படுத்தியுள்ளார் ராம் அருண் காஸ்ட்ரோ.
நடிப்பில் ஒரு புதுமுகம் என்கிற அளவிற்கு தெரியாதபடி, ஒரு அறிமுக இயக்குனர் என்று சொல்ல முடியாதபடி படத்தையும் நேர்த்தியாக இயக்கியுள்ளார்.

எளிய கிராமத்து மனிதர்கள் என சொல்லும்படி மலை கிராமத்து மக்களாக படத்தில் நடித்துள்ள அனைவருமே வாழ்ந்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக மாதேஸ்வரன் கதையை எதார்த்தமாக சொல்லிக் கொண்டே செல்லும் பிச்சைக்காரன் மூர்த்தி, கிளைமாக்ஸில் வந்து நெகிழ வைக்கும் கயல் பாட்டி, மாதேஸ்வரனின் காதலி, கங்காணியாக நடித்து மக்களை கொடுமைப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் என அனைவருமே பொருத்தமாக தேர்வு தான்.

நிகழ்காலத்தையும் வரலாற்று காலத்தையும் அழகாக பிரித்து சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து கதை சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ. ஆனால் எந்தவித திருப்பமும் இல்லாமல் ஒரு டாக்குமென்ட்ரி படம் போல நகர்வது ஒரு குறை தான். அதே சமயம் தனது அழகான ஒளிப்பதிவால் இந்த படத்தை தாங்கிப் பிடித்துள்ளனர் பிலிப் ஆர்.சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவன் இருவரும். உண்மையிலேயே அந்த மலை கிராமத்திலேயே நாமும் செட்டில் ஆகிவிட்டது போன்ற உணர்வை கொடுத்திருக்கிறார்கள்.

தனியார் கூரியர், பார்சல் சர்வீஸ், டெலிவரி பாய் என நவீன வசதிகளுக்கு நகர்த்து மக்கள் பழக்கப்பட்டு விட்டாலும் இன்னும் எளிய கிராமத்து மனிதர்கள் அரசாங்கத்தின் தபால் நிலையத்தையே ஆதாரமாக நம்பியுள்ளார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த படம் கூறியுள்ளது.