திருமணத்தில் விருப்பம் இல்லாத மணப்பெண்களை தூக்குவதை தொழிலாக செய்யும் ஒரு இளைஞனை பற்றிய கதை.
திருமண விழா நடத்திக் கொடுக்கும் ‘வெட்டிங் பிளானர்’ தொழில் செய்பவர்களுக்கு மத்தியில், திருமணத்தை வெட்டி விடுவதை தொழிலாகச் செய்கிறார் சரவணன் (‘மெட்ரோ’ ஷிரிஷ்). இதில் பணத்துடன் பகையையும் சம்பாதிக்கும் அவர், குறிப்பிட்ட நாளுக்குள் திருமணம் செய்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார். காதலியும் (மிருதுளா முரளி) கைவிட்டுப்போன நிலையில், அவருக்குப் பெண் கிடைத்ததா? திருமணம் நடந்ததா? என்பது கதை.
ஷிரிஷ் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறார். அவர் நண்பர்களுடன் சேர்ந்து மணப்பெண்களை தூக்கும் விதம், சிறப்பு.
மிருதுளா உணர்ச்சிகளை இயல்பாக முகத்துக்கு கொண்டு வருகிறார். கதாநாயகியை விட சிறப்பாக நடித்துள்ளார் அருந்ததி நாயர். வசன காமெடி மூலம் படம் பார்ப்பவர்களை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார், சதிஷ்.
‘மார்க் பாபு” வாக வரும் யோகி பாபு கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார். செந்திலை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம்.
தரன் குமார் இசையில், பாடல்கள் கேட்கலாம். எம்.விஜய் ஒளிப்பதிவில், படத்திற்கு பலம். எம். ரமேஷ் பாரதி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இடைவேளை வரை, கதையும், காட்சிகளும் எந்தவித கவன ஈர்ப்பும் இல்லாமல் மெதுவாக கடந்து செல்கின்றன. இடைவேளைக்குப்பின், கதையுடன் பார்வையாளர்களை ஒன்ற வைத்து விடுகிறார், டைரக்டர்.
பேய்களுக்கும், பிரமாண்டங்களுக்கும் மத்தியில், இப்படியும் ஒரு ஜாலியான படம்.