நானே வருவேன் – விமர்சனம்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படம் வெளியாகியுள்ளது.

இரட்டையர்களாகப் பிறந்தவர்கள் கதிரும் பிரபுவும். இவர்களில் கதிர், சிறு வயதிலிருந்தே சற்று மாறுபட்ட மனநிலையைக் கொண்டவராக இருக்கிறார். அதைக்கண்டிக்கும் தந்தையையே கொலை செய்கிறார் கதிர். இதனால், கதிரை கைவிட்டுவிட்டு, பிரபுவை மட்டும் அழைத்துக் கொண்டு செல்கிறார் அவர்களது தாய்.

இருபது வருடங்களுக்குப் பிறகு பிரபு, திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிரபுவின் மகள் சத்யா உடம்பில் ஒரு பேய் புகுந்து கொள்கிறது. சத்யா உடம்பை விட்டு வெளியேற வேண்டுமென்றால் ஒரு கொலையைச் செய்யச் சொல்கிறது. யாரை கொல்லச் சொல்கிறது, எதற்காகக் கொல்லச் சொல்கிறது, கதிருக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் மீதிக் கதை. இவற்றை ஹாரர் – த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படம்தான் ‘நானே வருவேன்’.

மூக்குக்கண்ணாடி, அளவான தாடியுடன் சாந்தமான ‘பிரபு’. பரட்டை தலை, க்ளின்ஷேவ் லுக்கில் அரக்கனான ‘கதிர்’. இரண்டு கதாபாத்திரங்களின் குணாதிசயங்களையும் தன் நடிப்பின் மூலம் பிரித்துக் காட்டுகிறார் தனுஷ். ஏற்கெனவே ‘கொடி’ படத்தில் இப்படியான இரண்டு தனுஷ்களை பார்த்திருந்தாலும், அதன் சாயல் ஒட்டிக் கொள்ளாவண்ணம் மெனக்கெட்டு புதுமைக் காட்டிருக்கிறார்.

ஒரு சில நிமிடமே வந்துபோனாலும் தனது மிரட்டலான தோற்றத்தால் ஈர்க்கிறார் செல்வராகவன். இந்துஜா ரவிச்சந்திரன் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்துக்கான மைய உணர்வுநிலையை தனது நடிப்பால் குலையாமல் எடுத்துச் சென்றிருக்கிறார் மகளாக நடித்திருக்கும் சிறுமி ஹியா தவே.

இரண்டாம் பாதியில் வரும் நடிகை எல்லி அவரம் மற்றும் தனுஷின் சிறுவயது வெர்ஷன்களாக வரும் சிறுவர்கள் மற்றும் அவரின் மகன்களாக நடித்திருக்கும் சிறுவர்களின் நடிப்பு கதையோட்டத்திற்கு பலம். தவிர, யோகிபாபு, பிரபு கதாபாத்திரங்களின் தேவை, திரையில் பெரிய அளவில் தேவைப்படவில்லை.

கிட்டத்தட்ட 11 வருடங்களுக்குப் பிறகு சாத்தியமாகியிருக்கிறது தனுஷ் – செல்வராகவன் கூட்டணி. ஆனால் இந்த முறை தனுஷின் கதையை செல்வராகவன் படமாக்கியிருக்கிறார். ‘காஞ்சனா’ முதல் ‘கான்ஜூரிங்’ வரை பார்த்து பழக்கப்பட்ட கதை என்றாலும், பல்வேறு முடிச்சுகளை தன்னுள் அடக்கிவைத்திருக்கும் திரைக்கதையால் படத்தின் முதல் பாதி சுவாரஸ்யம் நிறைந்த சஸ்பென்ஸுடன் கடக்கிறது.

மாஸான காட்சிகளின்றி, கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நகரும் படம், ஒருபுறம் தந்தை – மகள் பாசத்தையும், மறுபுறம் மகளை மீட்கமுடியாமல் தவிக்கும் தந்தையின் கையறு நிலையையும், கூடவே சில அமானுஷ்ய காட்சிகளையும் பதிவு செய்வதன் மூலம் பார்வையாளர்களின் ஆவலை முதல் பாதி தூண்டுகிறது. குறிப்பாக இடைவெளியில் வரும் திருப்பம் நம்மை சிலிர்க்க வைக்கிறது.

இரண்டாம் பாதியின் திரைக்கதையை சுவாரஸ்யமில்லாமல் வெறும் காட்சிகளாக கடக்க வழிவகுக்கின்றன. குறிப்பாக, எடுத்துக்கொண்டால் கதிர் கதாபாத்திரத்தின் உளவியல் ரீதியான பிரச்சினை குறித்தோ, அதன் பின்புலம் குறித்தோ தெளிவுப்படுத்தப்படுத்தாமல் வெறும் அரக்கத்தனத்தை மட்டுமே காட்சியாக்கியிருப்பது ஒரு கட்டத்திற்கு மேல் ரசிப்புக்கு வேலியிடுகிறது.

யுவன் சங்கர் ராஜாவின் கூஸ்பம்ப் பின்னணி இசை, பழைய பாடல்களை காட்சிகளுக்குத் தகுந்தவாறு பொருத்தியிருக்கும் விதம், ‘வீரா சூரா’ பாடல் மற்றும் சில சுவாரஸ்யமான காட்சிகள் மட்டுமே படத்தை தாங்கிப்பிடிக்கின்றன. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் வெண்ணிற இரவும், அடர்ந்த காடுகளும், சண்டைக் காட்சிகளும் ஈர்க்கின்றன.

மொத்தத்தில் ஒரு நல்ல ஹாரர் த்ரில்லர் படம் இந்த நானே வருவேன்.