அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், நிகிலா விமல், சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் போர் தொழில்.
சென்னையில் காவல்துறைப் பணியில் இணையும் பிரகாஷ் (அசோக் செல்வன்), கிரைம் பிராஞ்ச் எஸ்.பியான, லோகநாதனிடம் (சரத்குமார்) உதவியாளராக நியமிக்கப்படுகிறார். திருச்சியில் அடுத்தடுத்து 2 பெண்கள் ஒரே மாதிரியாகக் கொல்லப்படுகிறார்கள். குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பணி லோகநாதனிடம் ஒப்படைக்கப்படுகிறது. முதலில் பிரகாஷை வேண்டா வெறுப்பாகச் சேர்த்துக்கொள்ளும் லோகநாதன், அவர் போதாமைகளைச் சுட்டிக்காட்டி அவமதிக்கிறார்.
ஆனால் விசாரணையின் அடுத்தடுத்தக் கட்டங்களில் வெளிப்படும் பிரகாஷின் அறிவையும் திறமையையும் உணர்ந்து, அவரிடம் முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்கிறார். இதற்கிடையில் மேலும் 2 பெண்கள் அதே பாணியில் கொல்லப்படுகிறார்கள். கொலையாளி யார்? அவர் ஏன் இந்தக் கொலைகளைச் செய்தார்? இதைக் கண்டுபிடிக்கும் பயணத்தில் லோகநாதனுக்கும் பிரகாஷுக்கும் என்ன ஆனது? என்பது மீதிக் கதை.
கண்டிப்பும் திறமையும் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு கதாபாத்திரத்தில் வரும் சரத்குமார் அசாத்தியமான நடிப்பால் அசர வைக்கிறார். தனக்கு கீழே பணி செய்பவர்களிடம் சிடுசிடுவென இருப்பது, கொலையை பார்த்தே கொலைகாரன் மனநிலையை துல்லியமாக அறிவது என சரத்குமாரின் கெத்தான துப்பறியும் நடிப்பை ரசிக்க முடிகிறது. பயந்தாலும் அதை வெளியில் காட்டாத போலீஸ் அதிகாரியாக வரும் அசோக் செல்வன ஆரவாரம் இல்லாத அமைதியான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். படித்ததை வைத்தே அவர் துப்பறியும் காட்சிகள் சுவாரஸ்யம்.
நிகிலா விமல், ஓ.ஏ.கே.சுந்தர், பி.எல்.தேனப்பன், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.
த்ரில்லர் கதைக்கான இசையை வழங்கியுள்ளார் ஜேக்ஸ் பிஜாய், கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய க்ரைம் த்ரில்லர் படம் இந்த போர் தொழில்.