டக்கர் ; விமர்சனம்

இயக்குனர் கார்த்திக் ஜி.க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யான்ஷா, அபிமன்யூ சிங் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் டக்கர்.

குடும்பத்தின் வறிய நிலையைப் போக்க, சென்னைக்கு வந்து கால் டாக்ஸி ஓட்டுகிறார் கிராமத்து இளைஞர் குணா (சித்தார்த்). ஆள் கடத்தல் தலைவன் ராஸின் (அபிமன்யு சிங்) ஆட்கள், தொழிலதிபர் அருண் வைத்தியநாதனின் மகள் லக்கியைக் (திவ்யான்ஷா) கடத்தும்போது காப்பாற்றுகிறார் குணா.

ஆனால், வீட்டுக்குச் செல்ல மறுக்கும் லக்கி, குணாவை ‘திக்குத் தெரியாமல் ஒரு பயணம் போகலாம்’ என்று அழைக்கிறாள். உடன்படும் குணாவும், லக்கியும் அந்தப் பயணத்தில் காதலையும் காமத்தையும் வைத்து ஆடும் ஈகோ ஆட்டமே கதை.

பணம் தான் வாழ்க்கை என நினைக்கும் நாயகனுக்கும் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என உணர்ந்த நாயகிக்கும் இடையிலான உறவைச் சித்தரிக்கும் படத்தில், நகைச்சுவை, ஆக்‌ஷன் அம்சங்களைத் தூக்கலாக வைத்து விறுவிறுப்பாகக் கதை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ஜி.கிருஷ்.

சாக்லேட் பாயாகவே நாம் பார்த்த பழகிய சித்தார்த்தை, ஆக்சன் ஹீரோவாக பார்ப்பதற்கு சற்று புதுமையாகவே இருக்கிறது. ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

நாயகி திவ்யான்ஷா, அபிமன்யூ சிங், முனீஸ்காந்த், யோகிபாபு உள்ளிட்டோர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

முதல் பாதியின் திரைக்கதை ஓரளவிற்கு விறுவிறுப்பாக இருந்தாலும், இரண்டாம் பாதியின் திரைக்கதை, படத்திற்கு சறுக்கலாக அமைந்திருக்கிறது.

நிவாஸ் பிரசன்னாவின் இசை படத்திற்கு பலம். படத்தின் தொடக்கத்தில் இருக்கும் விறுவிறுப்பும், எதிர்பார்ப்பும் அடுத்தடுத்த காட்சிகளில் கரைவதை காண முடிகிறது. ஒரு சில ஆக்சன் காட்சிகள் தெறிக்கிறது. குறிப்பாக கார் சேசிங் காட்சிகள் வேற லெவல்.

மொத்தத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்ப்பவர்களுக்கு டக்கர் பிடிக்கும்.