ராஜா கிளி ; விமர்சனம்

அன்பகம் என்ற மனநல காப்பகத்தை நடத்தி வரும் சமுத்திரகனி, வழியில் மனநலம் பாதித்த நபரை பார்த்து அழைத்து வருகிறார். அவருக்கு நல்ல உடை, உணவு வழங்கி தன் காப்பகத்தில் அடைக்கலம் கொடுக்கிறார். அவர் யார் என்ற கேள்வி எழும் போது, அந்த நபர் வைத்திருக்கும் பழைய துணிகளுக்கு நடுவே பழைய டைரி இருக்க அதில் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றி அந்த நபர் எழுதி வைத்திருப்பதை சமுத்திரகனி படிப்பது போல் படம் ஆரம்பமாகிறது

தொழிலதிபர் முருகப்பா, முருகக்கடவுளுக்கு அடுத்து மதிப்பது தனது மனைவியைத்தான். ஆனால், மனைவிக்கோ கணவன் மீது சந்தேகம். நொந்து நூலாகிக் கிடக்கும் அவருக்கு எதேச்சையாக ஒரு அழகியின் அன்பு கிடைக்க.. அவளை திருமணம் செய்து கொள்கிறார். அதே போல இன்னொரு இடத்தில் அன்பு கிடைக்க.. அவளையும் திருமணம் செய்துகொள்கிறார்.இடையில் சில விவகாரங்கள் ஏற்பட்டு கொலை வழக்கில் சிக்குகிறார். அதன் பிறகு என்ன ஆகிறது என்பதை பேமிலி மற்றும் த்ரில்லராக சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்

பெரும் செல்வந்தர், மனநலம் பாதிக்கப்பட்ட பிச்சைக்காரர் ஆகிய இருவித தோற்றங்களில் நடித்திருக்கிறார் தம்பிராமையா.செல்வந்தர் வேடத்தில் அவருடைய ஆட்டம் பாட்டம் எல்லாம் உற்சாகத் துள்ளலாக அமைந்திருக்கிறது.தற்காலக் கதாநாயகர்களே பொறாமைப்படும் வண்ணம் தோழிகளோடு கும்மாளம் போடுகிறார்

வழக்கமாக அன்பை செலுத்தும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மெய் சிலிரிக்க வைக்கிறார் சமுத்திரக்கனி. விசாகாவின் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா அழகால் மட்டுமல்லாமல் நடிப்பாலும் நம்மை கட்டிப் போடுகிறார்.

அம்மாவாக ரேஷ்மா, உதவி கமிஷ்னராக அருள்தாஸ், சாமியாராக பழ கருப்பையா என படத்தில் தோன்றிய அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் தம்பி ராமையாவின் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையமைத்திருக்கும் சாய் தினேஷ் பணி சிறப்பு.

ஒளிப்பதிவாளர்கள் கேதார்நாத் – கோபிநாத் ஆகியோரது கேமரா, முருகப்பனின் பணக்கார வாழ்க்கையையும், பசி மிகுந்த வாழ்க்கையையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்கள் எல்லாம் கடைசியாக ஒரு பெண்ணாசையால் வீழ்த்த கதையெல்லாம் உலக வரலாறுகளில் நிறையவே உண்டு. அந்த வரலாறில் ஒன்றாக இந்த முருகப்பரின் கதையையும் அழகாக படம் பிடித்திருக்கிறார்கள்.

சபலம் மனிதனை எப்படி சறுக்கலை சந்திக்க வைக்கும் என்பதையும், பெண்களின் அவசர புத்தியால் மனிதர்களில் புனிதர்கள் எப்படி குற்றவாளிகளாக ஆக்கப்படுகிறார்கள், என்பதையும் சினிமா பாணியில் சொன்னாலும், உணர்வுப்பூர்வமான கிளைமாக்ஸ் மூலம் ஒட்டு மொத்த பெண்களுக்கும் பாடம் புகட்டியிருக்கிறார் இயக்குநர் உமாபதி ராமையா