‘ராஜபீமா’ திரைப்பட விமர்சனம்


சென்சார் கெடுபிடி காரணமாக மிருகங்களை வைத்து படம் எடுப்பது ரொம்பவே குறைந்துவிட்டது. அதிலும் குறிப்பாக யானையைக் கட்டி தீனி போட முடியாது என்பது போல யானைகளை வைத்து படம் இருப்பது சுலபம். ஆனால் சென்சார் மற்றும் வனவிலங்கு துறையிலிருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது இன்னொரு பிரசவம் போல என்பதால் யாரும் யானையை வைத்து படம் எடுக்க துணிவதில்லை.

பிரபு சாலமன் மட்டும் இந்த 12 வருடங்களில் கும்கி, காடன் என இரண்டு படங்களை யானையை மையப்படுத்தி எடுத்து இருந்தார். அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படியான படம் எதுவும் வரவில்லை. இந்த நிலையில் தான் மீண்டும் நீண்ட நாளைக்கு பிறகு யானையை மையப்படுத்திய ஒரு படமாக இந்த ராஜ பீமா திரைப்படம் வெளியாகி உள்ளது. இதன் கதை என்ன ? ரசிகர்களை இது எந்த விதத்தில் கவர்கிறது என பார்க்கலாம்

கிராமத்தில் தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வாழ்கிறார் சிறுவன் ஆரவ் அப்போது கிராமத்திற்குள் ஏதேச்சையாக ஒரு யானை புகுந்து விட அனைவரும் அதை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சிக்கிறார்கள். அப்போது தெரியாமல் யானையிடம் போய்விடும் ஆரவ் அதனுடன் நட்பாக பழகுகிறார், அதனிடம் தன் தாய் பாசத்தை உணர்கிறார், வேறு வழியின்றி ஆரவின் தந்தையும் பீமா என பெயரிட்டு அந்த யானையை தங்கள் வீட்டில் ஒருவராக வளர்க்கிறார்,

ஒரு கட்டத்தில் யானையை புத்துணர்வு முகாமுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அழைத்துச் செல்கிறார்கள் அதிகாரிகள். ஆனால் சில நாட்கள் கழித்து அங்கே சென்று பார்க்கும் ஆரவிடம் வேறு யானையை காட்டுகிறார்கள். அப்படி என்றால் பீமா யானை எங்கே சென்றது ? அது மாயமானதன் பின்னால் என்ன நடந்தது என தேடத் தொடங்குகிறார் ஆரவ். அவருக்கு விடை கிடைத்ததா என்பது மீதி படம்.

நாயகனாக நடித்திருக்கும் ஆரவ், ஆக்‌ஷன், நடிப்பு இரண்டிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அவரது காதலி உடனான காட்சிகளை விட, அவர் வளர்க்கும் யானை உடனான காட்சிகள் அதிகமாக இருப்பதால், அவருக்கும் யானைக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி நன்றாகவே வேலை செய்திருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் ஆஷிமா நர்வால், ஆரவை காதலிப்பது, ஒரு பாடல், சில காட்சிகள் என்று தனக்கு கொடுக்கப்பட்ட குறைவான வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

வனத்துறை அமைச்சரிடம் வேலைக்குச் சேரும் துர்கா பாத்திரத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். பீமாவை மீட்க உதவுவதோடு, யானைகளின் தந்தங்களைக் கடத்தும் கும்பலையும் கண்டுபிடிப்பதற்கும் உதவும் கதாபாத்திரம் அவருக்கு.

வில்லத்தனத்தில் வித்தியாசமான கோணத்தைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் கே எஸ் ரவிக்குமார். செண்டிமெண்ட் காட்சிகளில் அவ்வப்போது சோகமான வசனங்களை பேசி செல்கிறார் நாசர். ஓவியா, ஒரு பாடலுக்கு வந்து கலர்ஃபுல் உடைகளில், கவர்ச்சி காட்டுகிறார். யோகிபாபுவின் காமெடி பெரிதாக படத்தில் எடுபடவில்லை.

இசையமைப்பாளர் சைமன் கே.கிங் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஒகே. ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதிஷ் குமார் கதைக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியிருக்கிறார். யானையின் காட்சிகளை சிறுவர்களுக்கு பிடித்த வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மனிதனுக்கும் விலங்குக்குமான பிணைப்பை மையப்படுத்தி அதிலும் யானையை மையமாக கொண்ட படம்.விலங்குகளிடம் இருக்கும் அன்பையும், மனிதர்களுக்கு செல்ல பிராணிகளிடத்தில் இருக்கும் அன்பையும் வெளிக்காட்டும் வகையில் படத்தை இயக்கியிருக்கிறார் நரேஷ் சம்பத். அதற்காகவே அவரை பாராட்டலாம்.