இராமாயணக் கதை,திரைப்படமாக,தொலைக்காட்சித் தொடராக,இணையத் தொடராக எனப் பல்வேறு வடிவங்களில் வந்து கொண்டேயிருக்கிறது.
அதில் இன்னொரு புதிய முயற்சியாக வந்திருக்கிறது ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா.2டி அனிமேஷன் எனச் சொல்லப்படும் இருபரிமாண இயங்குபடமாக இப்படம் வந்திருக்கிறது.
அயோத்தியின் அரசராக பதவி ஏற்க இருந்த ராமர், சூழ்ச்சியின் காரணமாக 14 வருடங்கள் வனவாசம் அனுப்பப்படுவது, ராவணனால் சீதா கடத்தப்படுவது, சீதையை தேடிச் செல்லும் ராமன், வானரப் படைகளின் உதவியுடன் ராவணனை வீழ்த்தி, லங்கையில் இருக்கும் சீதாவை மீட்டதோடு, அங்கிருக்கும் அடிமைகளையும் மீட்டது, என ராமாயணத்தின் கதையை அனிமேஷன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும்படி ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ வடிவமைக்கப்பட்டுள்ளது
ஜப்பானிய இயக்குநர் யூகோ சாகோ, 1993 இல் உருவாக்கிய 2டி அனிமேஷன் படத்தை, 4K மாஸ்டெரிங் செய்து தற்போது வெளியிட்டுள்ளனர் கீக் பிக்சர்ஸ். ஒரு ஜப்பானியரின் பார்வையில் ராமாயணத்தைப் பார்ப்பது என்பது மிகவும் சுவாரசியமாக உள்ளது. உதாரணத்திற்கு, அனுமன் கடலின் மீது பறக்கும் போது சிம்ஹிகா எனும் ராட்சசி, அனுமனை விழுங்கி விட்டதாகப் புராணக்கதையில் வரும். அதே போல், சுரஸா எனும் ராட்சசி பறக்கும் சக்தியுள்ள ஊர்வன ஜந்துக்களின் தாய் என அழைக்கப்படுபவரும், அனுமனை வழி மறிப்பார்.
சிம்ஹிகாவின் வயிற்றுக்குள் புகுந்து வயிற்றைக் கிழித்து வெளியேறும் அனுமன், சுரஸாவின் வாய்க்குள் புகுந்து உடலைச் சின்னதாக்கி சட்டென வெளியில் வந்துவிடுவார். யூகோ சாகோ-வோ, இலங்கைப் பயணத்தில் அனுமன் எதிர்கொள்ளும்ருகத்தை டிராகனாகக் காட்டியுள்ளார்.
ராமன் சீதையை மட்டுமல்ல, இலங்கையில் ராவணனிடம் சிறைப்பட்டு கிடந்த பல அடிமைகளையும் மீட்டு வந்ததாக காட்டப்படுவது புராணம் தெரியாதவர்களுக்கு நிச்சயம் புதிய தகவலாக இருக்கும்
இந்திரஜித் மற்றும் லக்ஷ்மன் இடையே நடக்கும் வான் சண்டையும், ராவணனின் புஷ்பக விமானம், கோட்டை என அனைத்துமே கிராபிக்ஸ் மூலம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தில் தமிழ் டப்பிங் மிகவும் நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், கேரக்டர்கள் ஒவ்வொன்றையும் தெளிவாகவும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
சமகால சூழலில் புத்தகங்கள் வாசிப்பதென்பது குறைந்து வரும் நிலையில், இம்மாதிரியான அனிமேஷன் படங்கள் வரும் சமுதாய தலைமுறைகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை