காதலுக்காக ஏங்கும் கணவன். லட்சிய கனவுக்காக ஏங்கும் மனைவி இவர்களிடையே உருவாகும் பந்தம் இதுதான் படத்தின் மூலக்கதை.
குடும்ப கஷ்டத்திற்காக மலேசியாவுக்கு சென்று வேலை பார்த்து வரும் அறிவழகன் (விஜய் ஆண்டனி) 35 வயது ஆகியும் தனக்கு திருமணம் ஆகாத நிலையில், தமிழ்நாட்டுக்கு திரும்பி தனது சொந்த ஊருக்கு ஒரு துக்க நிகழ்ச்சிக்காக செல்கிறார். அங்கே அவர் கண்ணில் படும் லீலா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிருணாளினி ரவியை திருமணம் செய்து கொள்கிறார்.
சினிமாவில் எப்படியாவது ஹீரோயின் ஆக வேண்டும் என கனவுடன் இருக்கும் மிருணாளினி ரவி திருமணத்துக்கு பிறகு தனது கனவு சுக்கு நூறாக உடைந்து விட்டது என்பதால் கணவரை பிரிய நினைக்கிறார். அதனால், தனது கணவரை வெறுப்பவர் தனது லட்சியத்தில் ஜெயிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். மனை வெறுத்தாலும், அவரை ஒருதலையாக காதலிக்கும் விஜய் ஆண்டனியின் காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது தான் ‘ரோமியோ’ படத்தின் கதை.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என முழுமையான காதலனாக நடிக்க முயன்றிருக்கிறார் விஜய் ஆண்டனி. நன்றாக நடனமாடி வியக்கவும் வைக்கிறார். தன்னை வெறுத்தாலும் தனது மனைவியை ஒருதலையாக காதலிக்கும் அவரது நடிப்பு, அறிவு என்ற கதாபாத்திரத்தின் ஆழ்மனதில் இருக்கும் காதலை அழகாக வெளிப்படுத்துகிறது.
நாயகியாக நடித்திருக்கும் மிர்ணாளினி ரவி, வழக்கமான கதாநாயகியாக அல்லாமல் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
நாயகனுக்கு காதல் ஐடியா கொடுக்கும் யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி. சில இடங்களில் விஜய் ஆண்டனியை கலாய்த்தும் சிரிக்க வைக்கிறார். நாயகியின் நண்பர்களாக நடித்திருக்கும் ஷாரா மற்றும் குழுவினர் வரும் காட்சிகள் கூடுதல் கலகலப்பு. விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், ஸ்ரீஜா ரவி, சுதா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
பரத் தனசேகர் இசையில் பாடல்கள் செவிக்கும் மனதிற்கும் இதமாக அமைந்திருக்கிறது. பின்னனி இசையும் சிறப்பு.. ஒளிப்பதிவாளர் பாஷா தன் பணியை பக்காவாக செய்திருக்கிறார்.
காதல் கதையாக இருந்தாலும், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன், திருமணத்திற்குப் பிறகு பெண்களின் கனவு எப்படி சிதைந்து போகிறது என்பதை பற்றி பேசியிப்பதோடு, பெண்களுக்கும், அவர்களது கனவுகளுக்கும் ஊக்கமும், உற்சாகமும் கொடுக்க வேண்டும் என்ற மெசஜை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.