டியர் – விமர்சனம்


மெல்லிய சத்தம் கேட்டாலே தூக்கத்தில் இருந்து எழுந்துக்கொள்ளும் பழக்கம் உடைய நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், தூங்கும் போது சத்தமாக குரட்டை விடும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் நடக்கிறது. ஐஸ்வர்யா ராஷின் குறட்டையால், ஜி.வி.பிரகாஷ் குமார் எத்தகைய பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதையும், தன் குறட்டை சிக்கலால் ஐஸ்வர்யா ராஜேஷ் எத்தகைய அவமானத்தை எதிர்கொள்கிறார் என்பதையும் சொல்வது தான் ‘டியர் படத்தின் கதை.

ஜி.வி.பிரகாஷ், இந்த படத்தில் செய்தி வாசிப்பாளராகவும், தூக்கத்திற்கு முக்கியத்துவம் தருபவராகவும் நடித்திருக்கிறார். அமைதியாக தூங்குவதே நிம்மதியான வாழ்க்கை, என்று நினைப்பவருக்கு, சத்தமாக குரட்டை விடும் பெண் மனைவியாக அமைந்ததும், தனது இக்கட்டான சூழலை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதை தனது நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சிறு சிறு அசைவுகளில் கூட அசத்தியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பல மடங்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறார்

நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி ஒரு வேடத்தை ஏற்றுக்கொண்டதே துணிச்சல்.அதில் மிகச் சரியாக நடித்து இதெல்லாம் ஒரு குறையே இல்லை என்று படம் பார்ப்போரை நினைக்க வைத்து வெற்றி பெற்றிருக்கிறார்.

ஜி.வி.யின் ஸ்ட்ரிக்ட் அண்ணனாக வரும் காளி வெங்கட், குணசித்ரத்தில் டிஸ்டிங்ஷன் வாங்கிவிடுகிறார். சிடுமூஞ்சியாக ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துகிற இடத்தில் வெறுப்பு எற்படும் அளவுக்கு நடித்து அந்த கேரக்டருக்கு சிறப்பு சேர்க்கிறார்.

அவரது மனைவியாக வரும் நந்தினி இன்னொரு நடிப்பு ஆச்சரியம். கணவருக்கு பயப்படுகிற இடங்களில் ‘சட்சட்’டென மாறும் அவர் முகபாவங்கள் தமிழ்த்திரைக்கு ஒரு நல்ல நடிகை கிடைத்திருப்பதை உறுதி செய்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷின் தாயாராக வரும் கீதா கைலாசம் அவரது தந்தையாக இளவரசு பாத்திரப்படைப்பில் பளிச்சிடுகிறார்கள்.

ஜி.வி.பிரகாஷின் இசையும் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் கேமராவும் படத்தை தாங்கிப் பிடிக்கும் தாங்கு தூண்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு,காட்சிகளில் குளிர் நிறைத்து, படத்தில் இருக்கும் சூட்டைக் குறைத்திருக்கிறது.

வித்தியாசமான கதை, நடிகர்களிடம் வேலை வாங்கிய விதம், நேர்த்தியான திரைக்கதை மற்றும் காட்சிகள் என அனைத்தையும் அளவாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன், அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழும்படியான ஒரு படத்தை கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். நாயகியின் குறட்டை சிக்கலை மையமாக வைத்துக்கொண்டு தம்பதிகளின் புரிதல் உள்ளிட்ட பல விசயங்கள் பற்றி பேசியிருக்கும் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன், தம்பதிகள் இடையே ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வையும் கொடுத்திருக்கிறார்.